ஜாக்சன்விலே, புளோரிடா

மெரிக்காவில் தாய் இறந்த பிறகு பிறந்த குழந்தை இரு வாரங்களுக்கு பின் மரணம் அடைந்தது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள அக்குர்சோ தனது மனைவி லாரென் அகுர்சோ உடன் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. மீண்டும் கருவுற்ற லாரென் கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று மகப்பேறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உடல் நலம் குன்றி மரணம் அடைந்தார்.  அவர் வயிற்றில் உயிருடன் இருந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது.

மரணமடைந்த தாயின் வயிற்றில் வெகு நேரம் இருந்த குழந்தைக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதனால் அந்த குழந்தை மூளையில் காயத்துடன் பிறந்துள்ளது. குழந்தையை உயிர் காக்கும் உபகரணங்களுடன் மருத்துவமனையில் பாதுகாத்து வந்துள்ளனர். அந்த குழந்தைக்கு டியூப் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மற்றொரு டியூப் மூலம் உணவு செலுத்தப்பட்டது.

அமெரிக்க மக்கள் அனைவரும் இந்த குழந்தைக்காக பிரார்த்தனை செய்தனர் அத்துடன் பலர் இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவியும் அளித்தனர் ஆயினும் 18 நாட்களுக்கு பிறகு இந்த குழந்தையால் உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியை ஏற்கவும் சக்தி இல்லாத நிலை ஏற்பட்டது. அதை ஒட்டி மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க உபகரணங்கள் அகற்றப்பட்டு குழந்தை மரணம் அடைந்தது.

இந்த செய்தி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அக்குர்சோ, “எனது குழந்தை உயிர் பிழைக்க என்னுடன் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. எனது கரத்தில் அந்த குழந்தை உயிர் இழந்தான். மருத்துவர்கள் என் மகனைக் காக்க மிகவும் முயன்றனர். அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.