blackandwhite

செந்தமிழன் சீமான், செந்தமிழும் வண்டமிழும் கலந்து களமாடியிருக்கிறார்.  ஆபாசத்தின் உச்சமான அவரது பேச்சு, வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்கில் பரவி, தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது.

“எதிராளி பேசினால் அவரும் பதிலுக்கு பேசத்தானே செய்வார்” என்று அவரது ரசிகர்களும், “யாரோ ஒருவன் ஆபாசமாக பேசினால், ஒரு அமைப்பின் தலைவர் பதிலுக்கு இப்படி அருவெறுப்பாக பேச வேண்டுமா?” என்று எதிர் தரப்பினரும் லாவணி பாடிவருகிறார்கள்.

அரசியல் மேடையில் ஆபாசம் என்பது காலங்காலமாகவே இருந்துவருவதுதான். தி.மு.க.வின் வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, தீப்பொறி ஆறுமுகம் (பின்னாட்களில் அ.தி.மு.க.) என்று பெரிய பட்டியலே போடலாம். பல கட்சிகளிலும் இப்படிப்பட்ட பேச்சாளர்கள், வெளிப்படையாக மேடையில் பேசிய பேச்சுக்களை ஒலிபரப்பிய பாவத்துக்கு அந்த ஒலிபெருக்கிகளே அழும்.

மேடைப்பேச்சாளர்கள் மட்டுமல்ல.. முக்கிய அரசியல் தலைவர்களே ஆபாச பேச்சில் பி.ஹெச்.டி பட்டம் வாங்கியவர்கள்தான். அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.

இன்னும் வாட்ஸ்அப்பில் வராத அந்த ஆபாச பேச்சுக்கள் பற்றி பார்ப்போம். இதிலும் முதலிடம் பிடிப்பவர்,  எப்போதும் எதிலும் முதல்வராக இருக்கத் துடிக்கும் முன்னாள் தான்.

ஒரு சம்பவம்.

தான் துவக்கிய கட்சி நாளிதழ் மீது அலாதி ப்ரியம் அந்த தலைவருக்கு.   நாளிதழ் அச்சிடப்பட்டவுடன் முதல் பிரதியை சுடச் சுட தலைவர் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு  செல்வதே அந்த அலுவலக உதவியாளனின் முதல் பணி.  இளைஞனான அவன், நாளிதழ் தயாரானவுடன் அதை எடுத்துக்கொண்டு சைக்கிளில் பறப்பான். 2ஜி. 3ஜி அல்ல.. 20ஜி வேகத்தில் அவன் சைக்கிள் பறக்கும்.

அப்படி ஒரு முறை செல்லும்போது எதிர்பாராத விதமாக அவனது சைக்கிள் பஞ்சராகிவிட்டது. ஆனாலும் அவன் கவலைப்படவில்லை. சைக்கிளை அதே வேகத்தில் தள்ளிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக தலைவர் வீட்டுக்கு வந்தான். அன்றைய நாளிதழை உடனடியாக தலைவர் கையில் கொடுப்பதைத் தவிர வேறு நோக்கம் அவனுக்கு இல்லை.

அப்படியும் வழக்கமான நேரத்தை விட கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வழக்கமான நேரத்துக்கு நாளிதழ் வரவில்லையே என்று படபடத்தார் தலைவர். வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு போன் மேல் போன் செய்து விசாரித்தார்கள், தலைவரின் உதவியாளர்கள். டென்ஷன் ஆன தலைவர், வீட்டு வாசலுக்கே வந்து காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போதுதான்  பதறியபடியே சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தான் அந்த அலுவலக உதவியாளன். அவனைப் பார்த்தவுடனேயே ஆத்திரம் தாங்கவில்லை தலைவருக்கு.   “ஏண்டா தாமதம்..” என்று ஆரம்பித்தவர், அத்தனை கெட்டவார்த்தைகளிலும் அவனை அர்ச்சிக்கத் துவங்கினார். தமிழில் கரைகண்டவர் அல்லவா.. வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்படி வந்து விழுந்தன.

அங்கே இருந்த உயரதிகாரிகள் எல்லோரும் அதிர்ந்து போனார்கள். ஒரு முதியவர், முக்கிய அரசியல் தலைவர்,  முதல்நிலை பொறுப்பில் இருப்பவர்.. இப்படிப் பேசுவாரா என்கிற அதிர்ச்சி அவர்களுக்கு. ஆனால் அருகில் இருந்த மாண்புமிகுக்கள் தங்களுக்கும் நமட்டுச் சிரிப்பை உதிர்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு பழகிய விசயம்தானே இது!

அப்போது அந்த அலுவலக உதவியாளன் என்ன செய்தான் தெரியுமா?

கையில் பிடித்திருந்த சைக்கிளை அப்படியே விட்டான். கேரியரில் இருந்த பேப்பர் கட்டோடு சைக்கிள் சாலையில் விழுந்தது. அடுத்த விநாடி தலைவரைப் பார்த்து, “போய்யா.. நீயெல்லாம் ஒரு மனுசனா.. த்தூ” என்று துப்பினான். அடுத்தவிநாடி சரசரவென நடக்க ஆரம்பித்துவிட்டான். இப்போது மாண்புமிகுக்களும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.  இப்படி ஒரு எதிர்விளைவை அந்த இளைஞனிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு மாநிலத்தையே கட்டி ஆள்பவரை, பெரிய தலைவரை இப்படி சர்வ சாதாரணமாக நடுத்தெருவில் வைத்து காறி உமிழ்ந்துவி்டானே அந்த ஏழை இளைஞன் என்கிற பிரமிப்பு அவர்களுக்கு.

அவன் என்ன அரசியல்வாதியா.. எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள?

தலைவரும் அதிர்ச்சியாகிவிட்டார். இது போல ஒரு எதிர்வினையை அவர் எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு அவர் வாயிலிருந்து ஆபாச வார்த்தைகள் வரவில்லை. அப்புறம்.. வழக்கம்போலத்தான்!

அந்த தலைவருக்கு சற்றும் குறையாமல் “வார்த்தைகளை” வீசுபவர் எதிர்த் தரப்பு தலைவர்.   பெண் என்றும் பாராமல், பெரும் வார்த்தைகளை உதிர்ப்பார்.

இவருக்கும் ஒரு சம்பவம்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை அவருக்கு நெருக்கமான ஒருவர் வெளியிட்டுவிட்டார்.  இதனால் கடும் ஆத்திரமான தலைவர்,   குறிப்பிட்ட நபரின் வீட்டுக்கு தனது காரில் கிளம்பினார்.

அந்த நேரத்தில் தலைவரின் வருகையை எதிர்பாராத அந்த நபர், பெர்முடாஸுடன் தனது வீட்டு வராந்தாவில் நின்றுகொண்டிருந்தார். ஆவேசத்துடன் காரை விட்டு இறங்கிய தலைவர்,  அந்த நபரை அடிக்கப் பாய்ந்தார். அந்த நபர் பயந்து ஓடினார். அப்போது தலைவர் உதிர்த்த வார்த்தைகளை அக்கம் பக்கத்து வீட்டினர் கேட்டு அதிர்ந்தே போனார்கள். சிலர் மயக்கமாகிவிட்டதாகவும் கேள்வி.

ஏழைகளுக்காக கட்சி நடத்தும் அவர், தனிப்பட்ட முறையில் எதிராளிகளுக்கு தரும் ட்ரீட்மெண்ட்.. கேட்பருக்கு  1000 கிலோவாட் ஷாக் அடிக்கும்.

அவரது கட்சியிலிருந்து தீரத்துடன் பிரிந்துபோனவரும் அப்படித்தான். பத்திரிகையாளர்களிடம் பேசும்போதும்கூட, எக்குதப்பாக வார்த்தைகளை விடுவார். அது பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டார். “அவன் தப்பு பண்றான்.. அதான் திட்டுறேன். உங்களுக்கு என்ன” என்பது போல சிரிப்பார். அதனால்தானோ என்னவோ, தொ.கா  விவாதங்களில் அவர் பங்கெடுப்பது இல்லை!

கதர் கட்டிய கருப்புத்தலைவரும் லேசுபட்டவர் அல்ல. பொதுவாக அமைதியானவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் அவர் மறைந்துவிட்டாலும், உதிர்த்த கடுஞ்சொற்களை, உடன் இருந்தவர்கள் மறக்க மாட்டார்கள்.  கடைசி காலத்தில் அவர் பேசியதே யாருக்கும் புரியாமல் போய்விட்டது. தொலைக்காட்சிகளில், அவரது பேட்டியின்போது, அவர் பேசியதை எழுத்திலும் போடுவார்கள். அந்த அளவுக்கு பேச்சு குழறியது.

ஒரு முறை, தனது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரிடம், டில்லிக்கு பிளைட் டிக்கெட் போடு என்று சொல்லியிருக்கிறார். அந்த இரண்டாம் கட்டம்,  ஏனோ மறந்துவிட்டது. அவரை தலைவர் அழைத்தார். அப்போதுதான்,  “ஆஹா.. மறந்துட்டோமே” என்று இ.க.வுக்குத் தோன்றியது. பதறியபடி தலைவர் முன் சென்றவர், நடுங்கியபடியே “ஸாரி” சொல்லியிருக்கிறார்.

தலைவர் முகம் அமைதியாகவே இருந்தது. “அப்பாடா… தலைவர் கோபிக்கவில்லை” என்று நிம்மதி அடைந்திருக்கிறது இ.கட்டம். அப்போது தலைவர் ஏதோ  சொல்ல.. இ.கட்டத்துக்கு புரியவில்லை. “சமாதானமாக ஏதோ சொல்கிறார் போலிருக்கிறது” என்று ஆறுதல் அடைந்தவர், தலைவரின் வாய்க்கு அருகில் தனது காதைப் பொறுத்தி உற்று கவனித்தார். தலைவர் மீண்டும் அந்த வார்த்தையை உதிர்த்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இ.கட்டத்துக்கு வாந்தி பேதி! அப்படி ஒரு வார்த்தை அது!

நடிப்புக்கே நடிப்பு சொல்லிக்கொடுப்பவரும் இப்படித்தான். அவரும் அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர், தவிர தனிக்கட்சியும் நடத்தியவர்தானே. படப்பிடிப்பின்போது கோபம் வந்துவிட்டால் அத்தனை பேர் முன்னாலும் ஆபாச அர்ச்சனை நடத்திவிடுவார். “அண்ணனுக்கு கண் சிவக்க ஆரம்பிச்சாலே.. அத்தனை பேரும் அடுத்த ப்ளோருக்கு ஓடிருவோம்” என்பார்கள் சக நடிகர்கள்.

ஆவேசத் தலைவர் அடிக்கடி நாக்கைக் துறுத்துவதும் தன் கட்சிக்காரரை அடிப்பதும் தெரிந்த செய்திதான். ஆனால் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், தனிப்பட்ட முறையில் மைல்ட் ஆன வார்த்தைகளைத்தான் பிரயோகிப்பார்.

இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன், பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், “உன் அம்மாவை நான் தே.. என்று சொல்லலாமா” என்று அந்த பத்திரிகையாளரைக் கேட்டார். அது அந்த இதழிலும் அப்படியே பிரசுமானது.

பத்து பேரோ, நூற பேரோ.. தன்னை நம்பி பின்தொடர்கிறார்கள் என்கிறபோது, ஒரு தலைவர் முன்னுதாரணமாக திகழ வேண்டாமா   என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு விசயம்…  இவர்கள் பயன்படுத்தும் ஆபாச அர்ச்சனைகள் அனைத்தும் பெண்மையை, பெண்களை கொச்சைப்படுத்துவதாகத்தான் இருக்கின்றன. !

இவர்கள்தான்,, “பேரன்புமிக்க பெரியோர்களே..” என்கிற வார்த்தைக்கு அடுத்ததாக, “பெருமதிப்புக்குரிய தாய்மார்களே..” என்று மேடையில் முழங்குகிறார்கள்.