images
“நிற்க நேரமில்லை… படபடவென செய்திகளைச் சொல்கிறேன்.. கடகடவென குறித்துக்கொள்ளும்!” – ரைமிங்கோடு சொல்லியபடி வந்தமந்த நியூஸ்பாண்ட் “ஒருவழியாக எட்டு எம்.எல்.ஏக்களுக்கு ஆளுங்கட்சி அங்கீகாரம் கிடைக்கப்போகிறது..!” என்றார்.
நாம் புரியாமல் பார்க்க, அவரே தொடர்ந்தார்:
“தங்கள் தொகுதி நலனுக்காக முதல்வரை சந்தித்த எட்டு தே.மு.தி.க. எம்.எல்ஏக்களும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையப்போகிறார்கள்!”
“அதாவது அதிகாரபூர்வமாக இணைய போகிறார்கள்.. என்று சொல்லும்..!”
“ஆமாம்..!  அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்பதாக மீடியாவால் குறிப்பிடப்பட்டு வந்தாலும், சட்டசபையைப் பொறுத்தவரை அவர்கள் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள்தான்! இப்படியே இருந்துவிட்டால், வரும் தேர்தலில் தங்கள் கதி என்ன ஆவது என்று சிந்தத்த அவர்கள், ஓ.பி.எஸ்ஸை சந்தித்து தங்களது நிலையைச் சொல்லியிருக்கிறார்கள்.  இந்த விசயம் முதல்வர் காதுக்கு போக.. விரைவில் அதிகாரபூர்வமாக கட்சியில் சேரலாம் என்று  சொல்லப்பட்டிருக்கிறதாம்..!”
01-1372663633-dmdk-reble-mla--600
 
“அப்படியானால் அவர்கள் எட்டு பேருக்கும் நிச்சயம் அ.தி.மு.க. சார்பில் சீட்டு உண்டு என்று சொல்லும்!”
“அந்த உத்திரவாதம் தரப்படவில்லையாம். இப்போதைக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகிய இருவருக்கு மட்டும் சீட் உறுதி என்கிற சூழல் நிலவுகிறதாம். மற்றவர்களுக்கு உண்டா இல்லையா என்பது அம்மாவுக்கே வெளிச்சம்!” –  சொல்லி முடித்த நியூஸ்பாண்ட் சற்று நேரம் அமைதியானார்.
பிறகு, “அந்த தலைவரின் நிலை யாருக்கும் வரக்கூடாது” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவர், “யார் என்ன என்று கேட்காமல் நான் சொல்வதை மட்டும் கேளும்!”  என்று உத்தரவிட்டார். பிறகு தொடர்ந்தார்:
“நம்பிக்கை கொண்டவர்களுக்கு, தை மாத பவுர்ணமி முக்கியமான தினம். அன்றையதினம் இரவு யாகங்களை செய்தால் பெரும் பலன் அளிக்கும் என்பது நம்பிக்கை உள்ளோரின் எண்ணம். அதன்படி அரசியல் வட்டாரத்தில் முக்கிய குடும்பத்தினர் சிலர் யாகம் செய்தார்கள்.
அவர்களில் ஒரு முக்கிய பெண்மணி,  சென்னை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் யாகம் ஒன்றை செய்தார். அதுதான் அவரது குடும்பத்தில் பெரும் பிரச்சினையை உண்டு பண்ணிவிட்டது!”
“பிரச்சினை தீரத்தானே யாகம் செய்வார்கள்.. யாகமே பிரச்சினை ஆகிவிட்டதா” என்று கேட்ட நம்மை முறைத்த நியூஸ்பாண்ட், “  அந்த பெண்மணி தனது கணவரின் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காக “சத்ரு ஜெய ஹோமம்” செய்தார் என்று செய்தி பரவிகிடக்கிறது. இந்த ஹோமம் மிக சக்தி வாய்ந்ததாம். யார் சார்பாக செய்யப்படுகிறதோ அவரது எதிரிகள் வீழ்ந்தே விடுவார்களாம்.
இதை அகத்தியமுனிவரே சொல்லியிருக்கிறாராம்” என்ற நியூஸ்பாண்ட், அந்த மந்திரத்தை கடகடவென சொல்ல ஆரம்பித்தார்:
“கேளப்பா சத்ரு ஜெய ஓம சூட்சமந்தான்
கெடியான நாற்கோண குண்டம் செய்து
தயங்காதே நாயுருவி சமித்து வாங்கி
திறமாக அக்னியேதான் வளர்த்து
மயங்காமல் புவனையுட மந்திரந்தன்னால்
மகத்தான கொடியறுகா  லோமம்பண்ணு”
– நியூஸ்பாண்டை தடுத்தாற்கொண்டு, “அய்யா.. மந்திரமெல்லாம் சொல்லி மிரட்டாதீர்.. விசயத்துக்கு வாரும்..” என்றோம்.
சிரித்தபடியே தொடர்ந்தார் நியூஸ்பாண்ட்:
“அதாவது இந்த ஹோமத்துக்கு நாற்கோண வடிவிலான ஹோம குண்டத்தை பயன்படுத்த வேண்டுமாம். ஹோமம் செய்பவர் கிழக்குமுகம் பார்த்து அமரவேண்டும். ஹோம குண்டத்தில் நாயுருவி குச்சிகளை இட்டு தீமூட்ட வேண்டும்.. இதை பவுர்ணமி இரவில் செய்ய வேண்டும்.
இந்த ஹோமத்தை முறைப்படி செய்துவிட்டால், எதிரிகள் அழிந்துவிடுவார்களாம்… இந்த யாகத்தைத்தான் அந்த தலைவரின் குடும்பத்து மருமகள் செய்திருக்கிறார் என்று பேச்சு!” என்ற நியூஸ்பாண்ட்டை இடை நிறுத்தி.. “இதனால்  குடும்பத்துக்குள் என்ன பிரச்சினையாம்” என்றோம்.
“தனது கணவருக்கு தடையாக இருக்கும் மாமனாரை வீழ்த்தவே அந்த பெண்மணி   இந்த பயங்கரமான யாகத்தைச் செய்தார் என்று குடும்பத்தில் பிரச்சினை வெடித்திருக்கிறது.
அந்த பெண்மணிக்கு எதிர் அணியில் இருக்கும் குடும்பப்பெண்கள் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.
ஹோமம் செய்த பெண்மணியோ, “கடந்த பவுர்ணமி இரவில் அந்த கோயிலில் நான் ஹோமம் செய்தது உண்மைதான்.  அது, “நவ ஆவர்ண பூஜை”.  எடுக்கும் காரியம் சிறப்பாக நடப்பதற்காக செய்யப்படும் யாகம் அது. மற்றபடி எதிரியை அழிக்கும் “சத்ரு ஜெய ஹோமம்”  அல்ல” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
“அப்படியானால் எங்களையும் அழைத்துச் சென்றிருக்கலாமே.. ஏன் உனது அம்மா,  தங்கை என்று உன் குடும்பத்து ஆட்களை மட்டும் அழைத்துச் சென்றாய்” என்று கேட்கட்பட்டதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லையாம்.
இப்போது அந்த ஹோமத்தால் தலைவருக்கு ஏதும் பிரச்சினை ஏற்படுமோ என்று பயந்துபோய் கிடக்கிறார்கள். தலைவரும் வருத்தத்துடன், “நான் போன பிறகுதான் உங்க எல்லாருக்கும் என் அருமை புரியும்” என்று விரக்தியாக சொல்லியபடியே ஊருக்கு கிளம்பிப்போய்விட்டாராம்.
இதனால் தலைவரின் குடும்பத்து பெண்கள் பதறிப்போய், பதில் யாகம் நடத்தவும் ஜோதிடர்களிடம் ஆலோசனை நடந்து வருகிறது!
இந்த பிரச்சினையால்தான் குடும்ப குதர்க்கம் அதிகரித்து உச்ச கட்ட டென்சன் நிலவுகிறது!” என்றார் நியூஸ்பாண்ட்.
“ஹூம்.. பகுத்தறிவை நம்பினால் இந்த பிரச்சினைகளுக்கே வேலை இல்லை…! போகட்டும்.. ஆளுங்கட்சி சங்கதிகள் ஏதும் உண்டா..?”  என்றோம்.
 
download
“இல்லாமலா… நிறைய உண்டு. இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன்..!  கூட்டணி குறித்து பலவித திட்டங்களை ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். சில பல சிறு கட்சிகளோடு, பா.ஜ.க.வையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பமாக இருக்கிறதாம்!”
“அப்படியா..”
“ஆமாம்.. 2019வரை மத்தியில் பாஜக தான் ஆளப்போகிறது. இந்த நிலையில் அவர்களை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என்று, தற்காலிகமாக மிடாஸ் எம்.டியாக இருந்தவர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்!”
“ஓ.. அவரா..” என்று சிரித்தபடியே நாம் கேட்க.. “ஆமாம்.. அவரேதான்! மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது பல்வேறுவிதங்களில் பலனுள்ளதாக இருக்கும் என்று அவர் சொல்லியிருக்கிறார்..” என்றார் நியூஸ்பாண்ட்.
“ஓ..  பல்வேறு மாநில திட்டங்களுக்கா…” என்று நாம் கேட்க.., “இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீரே… “ என்று சிரித்தபடியே கிளம்பினார் நியூஸ்பாண்ட்.