5
அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து 2–வது பிரசார பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 3வது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரியில் நாளை (புதன்கிழமை) மதியம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஅள்ளி, ஓசூர், தளி, ஊத்தங்கரை (தனி) ஆகிய 11 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.
இதற்காக தர்மபுரியில் பென்னாகரம் சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள டி.என்.சி. வளாகத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, சீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. கூட்டம் நடக்கும் இடத்தின் அருகிலேயே ‘ஹெலிபேடு’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கூட்டம் நடக்கும் இடத்தை போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை (புதன்கிழமை) மதியம் தர்மபுரிக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் அவர் கார் மூலம் கூட்டம் நடக்கும் மேடைக்கு செல்கிறார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வரும் அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் தடுப்புக்கட்டைகளால் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை முதல் ஹெலிபேடு வரை இரு புறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கூட்டம் நடைபெறும் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அமருவதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.
பொதுக்கூட்டம் நடைபெறும் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான போலீசார் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. 11 தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல பாதுகாப்பு நடவடிக்கைகளை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காகவும், தகவல்களை முறையாக பரிமாற்றம் செய்யவும், தர்மபுரியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். ‘ஹெலிபேடு’, தார்சாலை, பந்தல் அமைக்கும் பணி, மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று தீவிர சோதனையிட்டனர்.