தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது குறித்து நேற்று செய்தி வெளியிட்டோம். கேரள பத்திரிகையாளர் மன்றத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்) உள்ளது. இங்கு தமிழ் இதழ்களில் பணிபுரிபர்களை சேர்த்துக்கொள்வதில்லை என்று புகார் எழுந்தது.
தமிழகத்தில் இருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் கேரள நிருபராக, திருவனந்தபுரத்தில் இருந்து பணியாற்றும் ஏ.கே. அஜித்குமார் என்ற பத்திரிகையாளரையும், தினத்தந்தி நிருபாக அங்கு பணியாற்றும் ஜேசு டென்னிசனையும் அங்குள்ள ப்ரஸ் கிளப்பில் (பத்திரிகையாளர் மன்றம்) சேர அனுமதிக்கவில்லை.
இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். அதன் பொருளாளர் அன்பழகன், நம்மிடம், “ஒரு மாநிலத்தில் வசிக்கும் பத்திரிகையாளரை அந்த மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சேர்க்க முடியாது என்பது தவறு. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், இங்கு வசிக்கும் பத்திரிகையாளர்கள் எவரும் சேரலாம். எந்தத் தடையும் கிடையாது.
கேரள பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ் இதழில் பணிபுரிபவர் என்பதால் சேர்க்க மறுப்பது கண்டனத்துக்குரியது. இது குறித்து அந்த மாநில முதல்வருக்கு கடிதம் எழுதப்போகிறோம். தொடர்ந்தும் இதே நிலை நீடித்தால், பத்திரிகையாளர் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம்” என்றார்.