விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளரக்த்தராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழழில்…” என்ற புத்தகம் பற்றிய சர்ச்சை தொடர்கிறது. அப் புத்தகத்தின் பின் அட்டையில் தமிழினி சொல்லாத வார்த்தைகள், அவரது பெயரில் பதிவாகியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நாமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் தமிழினியின் கணவர் ஜெயன் தேவன் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட எனது மனைவி தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் பின் அட்டைக் குறிப்பு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து எனது பதில்:
தமிழினி இறப்பதற்கு முன்னராகவே தனது நூலின் வடிவம் குறித்து தீர்மானித்திருந்தார். பின் அட்டைக் குறிப்புக்காக சில மேற்கோள்களையும் பத்திகளையும் தெரிவு செய்திருந்தார். ஆனால் அது யாருடைய கூற்று என்பதை அவர் அப்பட்டியலில் பதியவில்லை. அவற்றில், தற்போது நூலின் பின் அட்டையில் உள்ள குறிப்பும் ஒன்று. பதிப்பகத்தினர் என்னிடம் பின் அட்டைக்குறிப்பு கேட்ட போது, நான் அந்தக் குறிப்பை அவர்களுக்கு அனுப்பினேன். நூல் அச்சுக்குப் போக முன்னர் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த பிரதியின் அட்டையில் அக்குறிப்பு இடம் பெற்றிருந்த போதும் நான் அது தமிழினியின் குறிப்பென்றே நம்பினேன். தமிழினியின் நினைவு மலரிலும் நான் அக்குறிப்பை பின் அட்டையில் வெளியிட்டிருந்தேன். தீபச் செல்வனும், பிரேமா ரேவதியும் சுட்டிக் காட்டும் வரை அது தமிழினியின் குறிப்பென்றே நம்பினேன். தவறைத் திருத்திய தீபச் செல்வனுக்கும், பிரேமா ரேவதிக்கும் எனது நன்றி. எதிர்காலப் பதிப்புக்களில் இத் தவறு திருத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.இத்தவறினால் ஏற்பட்ட குழப்பங்களுக்கும், அசெளகரியங்களுக்கும் வாசகர்களுக்கும், காலச்சுவடு பதிப்பகத்தினருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” – இவ்வாறு ஜெயன் தேவன் கூறியிருக்கிறார்.
இப்புத்தகத்தை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணனை தொடர்புகொண்ட விளக்கம் கேட்டோம். விரைவில் அளிப்பதாக கூறினார். அதே போல தனது விளக்கத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த விளக்கம்:
“தமிழினியின் ‘ ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் பின்னட்டைக் குறிப்பு பற்றிய சர்ச்சைகளைக் கண்டேன். ஒரு விளக்கம்.
1.நவம்பர் மாதம் ஜெயகுமாரன் இந்த நூல் வெளியீடு தொடர்பாக என்னைத் தொடர்பு கொண்டார். பிரதியை அனுப்பக் கேட்டுப் படித்துப் பார்த்து ஒரு வார காலத்தில் வெளியிடுவதாக ஒப்புக்கொண்டோம். இலங்கைத் தீவுக்கான உரிமை ஜெயகுமாரனுக்கு உரியது என்று குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்தோம். நூல் பிரதி அவர் அனுப்பிக் கொடுத்த படியே வெளிவந்துள்ளது. பிழைதிருத்தம் மட்டுமே காலச்சுவடு மேற்கொண்டது. பின்னட்டை குறிப்பும் அவர் அனுப்பி வைத்த படியே வெளிவந்துள்ளது. தமிழினி பெயரை காலச்சுவடு சேர்க்கவில்லை. பின்னட்டை வரிகளை நாங்கள் தேர்வுசெய்யவும் இல்லை. நூல் அச்சுக்குப் போகும் வரை ஒவ்வொரு சிறு விடயமும் நூலின் இறுதி வடிவமும் ஜெயகுமரன் அவர்களின் ஒப்புதல் பெற்றே வெளிவந்தது. நவம்பரில் இருந்து தொடர்ந்த மின்னஞ்சல்களை முழுவதுமாகப் பார்வையிட்ட பிறகே இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.
- நூல் வெளிவந்ததுதம் பின்னட்டை குறிப்பு தன்னுடையது என்பதை பிரேமா ரேவதி சுட்டிக்காட்டினார் என்பது உண்மை. மேலும் அவர் இரண்டு விஷயங்களை சொன்னார். ஓன்று தன்னுடைய வரிகளை பின்னட்டைக் குறிப்பாக தமிழினி தேர்வு செய்தது தனக்கு மகிழ்ச்சி. இரண்டாவது, அதில் உள்ள சில சொற்களுக்காக தமிழினி தாகப்படக்கூடும் என்ற கவலை. இதை நான் இவ்வாறு விளக்கிக் கொண்டேன். பின்னட்டைக் குறிப்பில் தன் பெயரை வைத்தது தமிழினி. அதை நான் மாற்ற முடியாது. இரண்டாவது அதை எழுதியவருக்கு அதில் மறுப்பில்லை. இதை நான் தமிழினியின் பிழையாக ஒரு கணமும் யோசிக்கவில்லை. மாறாக தனக்கு பிடித்த வரிகளை அனுமதி பெற்று சுவீகரித்துக் கொண்டார் என்றும் அது அவர்தம் நட்பின் பாற்பட்டது என்றும் எடுத்துக் கொண்டேன். எனவே பிழையைத் திருத்த வேண்டும் என்று கருதவில்லை. அந்த முடிவுக்கு நான் மட்டுமே பொறுப்பு.
- இந்த முடிவுக்கு பிழை திருத்துவதில் உள்ள தயக்கமோ நடைமுறைகளோ காரணம் அல்ல. நூல் அச்சுக் சென்ற பின்னர் அதன் மென் பிரதியை நூல் வெளியீட்டில் வாசிப்பு நிகழ்த்துவதற்காக பிரேமா ரேவதிக்கு அனுப்பி இருந்தோம். அதில் ஒரு சிறிய ஆனால் முக்கியமான எழுத்துப் பிழையை அவர் சுட்டிக்காட்டினார். உடன் அந்த 16 பக்கங்களை மீண்டும் அச்சடித்தோம். இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே செயல்பட்டோம் என்பதற்கு இது ஒரு சான்று.
- இன்றைய நிலையில் மின் நூலில் பெயர் மாற்றத்தை விரைவில் செய்து விடலாம். மீதி அச்சுப் பிரதிகளிலும் இப்போதே திருத்திவிடுவோம்.” – இவ்வாறு கண்ணன் தெரிவித்துள்ளார்.