1

 

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அத்தனை அரசு ஊழியர்களும் ஒரே உத்தரவில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அதிர்ந்தார்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் அத்தனை பேர் வீடும் இழவு வீடானது.

“நல்லா வேணும்… ஒழுங்காவா வேலை செஞ்சானுங்க” என்று சிரித்தார்கள் மற்றவர்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் “நல்லா வேணும்..” என்றே அவர்களைத் தவிர இதரர்கள் சிரித்தார்கள்.

இதெல்லாம் உதாரணமே. ஒரு துறை சார்ந்தவர்களுக்கு பிரச்சினை என்றால், “அப்பாடா.. என்னா ஆட்டம் போட்டாணுங்க..” என்று இதரர்கள் ரசித்துச் சிரிப்பது வழக்கமாகிவிட்டது.

அவரவர், தங்கள் துறையில் எப்படி வேலை செய்கிறோம் என்பதை யோசிப்பதோ, மதிப்பீடு செய்வதோ இல்லை. அடுத்தவரின் செயல்பாட்டை விமர்சிப்பது மட்டுமே அனைவரது வேலையாக இருக்கிறத.

இப்படி யோசித்துப் பாருங்கள்.. “எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் நாம் அனைவரும் வருத்தப்படுவோம்?”

எந்தத் துறையினரும் நம்மில் பெரும்பாலோர் மனதில் வரமாட்டார்.

அதாவது தன்னைத் தவிர அடுத்தவர் அனைவரும் அயோக்கியர் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

இதுதான் தமிழக நிலை.

கேரளாவை எடுத்துக்கொள்ளுங்கள்.  அங்கே ஒரு துறையினருக்கு பிரச்சினை என்றால், நியாயமுள்ளவர் பக்கம் அனைவரும் நிற்பார்கள். அனைருமே பொது நலனில் அக்கறை உள்ளவராக.. இருக்கிறார்கள். (விதிவிலக்குகள் தவிர்த்து)  அந்த சமுதாயம் நன்றாக இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலும் ஆட்டோக்கள் சரியான கட்டணண் வாங்குகின்றன. பெரும்பாலும் சாலை தரமாக போடப்படுகின்றன. (இங்குபோல் அங்கு மழை பெய்தாலும் வெள்ளம் பாதிப்பதில்லை) பெரும்பாலும் அங்கு அரசு மருத்துவமனைகள் சரியாக இயங்குகின்றன. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

ஆனால் இங்கு பெரும்பாலும் எதுவும் சரியில்லை. காரணம் பெரும்பாலோர் எவரும் சரியில்லை. ஆகவேதான் எந்த்துறையினருக்கு சிக்கல் என்றாலும் பிற துறையில் இருப்போர் மகிழ்கிறோம். யார் மீதும் நியாயம் இருப்பதாய் நம்புவதில்லை.  எப்போதும் கடித்துக்குதற தயாராக இருக்கிறோம்.

தவிர.. “ஒருவர் தவறே செய்திருந்தாலும், அதற்காக நாகரீகமற்ற முறையில் எதிராளி நடக்கலாமா..” என்று சிந்திக்கும் நல்ல மனநிலை பலருக்கு இல்ல.

இது ஒட்டுமொத்த தமிழர்களின்   மனப்பிறழ்வே!

 எஸ்.  யாழினி ப்ரியன்