சென்னை:
‘தமிழக அரசின் மோசமான நிதி மேலாண்மை காரணமாக, போக்குவரத்து கழகங்கள் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றில் மட்டும் 2013 – 14ம் நிதியாண்டில், அரசுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை அளித்துள்ளார்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழகத்தில், 2014 மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, பொதுத்துறை சார்பில் 64 நிறுவனங்கள் செயல்பட்டன; 13 நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தன.
செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள், 64ல், 40 நிறுவனங்கள், 999 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. ஆனால், 20 நிறுவனங்கள், 13 ஆயிரத்து, 132 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
மற்றொரு நிறுவனமான, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நஷ்டத்தை, மாநில அரசு ஈடு செய்துள்ளது; மூன்று நிறுவனங்களில் லாபமோ, இழப்போ இல்லை.
இழப்பு ஏற்படுத்திய பொதுத்துறை நிறுவனங்கள்:
* மின் வாரியத்தின் துணை நிறுவனமான, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இழப்பு 11 ஆயிரத்து, 679 கோடி ரூபாய்.
* எட்டு போக்குவரத்து கழகங்களின் இழப்பு 1,265 கோடி ரூபாய். இந்த இரண்டு நிறுவனங்கள் மூலம், 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது.
தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டில், பல குறைபாடுகள் இருப்பது தணிக்கையின் போது கண்டறியப்பட்டுள்ளன.
2011 – 12 முதல், 2013 – 14 வரையிலான மூன்று ஆண்டுகளில், திறமையான மேலாண்மையை கையாண்டிருந்தால், பொதுத்துறை நிறுவனங்களின், 2,504 கோடி ரூபாய் இழப்பையும்; 182 கோடி ரூபாய் பயனில்லா முதலீட்டையும் தவிர்த்திருக்கலாம்.
மேலும், 13 செயல்படாத நிறுவனங்களில் இரண்டு, மூடப்படும் நிலையில் உள்ளன. இவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும். மீதமுள்ள நிறுவனங்களுக்கு, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும், விவேகத்துடன் மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு தணிக்கை அதிகாரி, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்கள்
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம்,
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்,
சென்னை டைடல் பார்க், தமிழ்நாடு முதலீட்டு கழகம் ஆகியவை லாபம் ஈட்டியுள்ளன என்றும் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மொத்ததத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, நிதி மேலான்மையில் சரியாக செயல்படவில்லை என்பதை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு சரியாக சப்ளை செய்வது, ஊழியர்களை நிர்வகிப்பது என்று திறம்பட செயல்பட்டு, வருடா வருடம் மது வருமானத்தைப் பெருக்கும் தமிழக அரசு, மற்ற அரசுத் துறைகளிலும் திறம்பட செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.