நியூயார்க்
மீண்டும் தமிழகத்தில் போர்டு கார் உற்பத்தி தொடங்குவது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
அவர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். அவருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் முதல்வர்ர் மு.க. ஸ்டாலின் இதை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் முதல்வர் மு க ஸ்டாலின்,
”தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடந்தது. 30 ஆண்டுகளாக தமிழகத்துடன் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது . சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த உற்பத்தியை கடந்த 2022-ம் ஆண்டுடன் அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது”
எனக் குறிப்பிட்டு உள்ளார்.