டில்லி:
சென்னை கடற்கரை சாலையில் உள்ள, நடிகர் சிவாஜி கணேசன் சிலையை, அடுத்தாண்டு, செப்டம்பர் வரை அங்கேயே இருக்க அனுமதிக்க கோரிய தமிழக அரசின் நிலைபாட்டை சுப்ரீம் கோர்ட் ஏற்றது.
சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள, நடிகர் சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால், அதை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு தமிழக அரசு, ‘சிவாஜி கணேசனுக்கு மணிமண்டம் அமைக்கப்படுவதால் அதுவரை சிலையை அகற்ற உத்தரவிட வேண்டாம் என கோரியது. இதை உயர் நீதிமன்றம், செப்டம்பர், 16க்குள் சிலையை அகற்ற உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் குரியன் ஜோசப், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், ”அடுத்தாண்டு (2016) , செப்டம்பருக்குள், மணிமண்டபம் அமைக்கப்பட்டு அங்கு சிவாஜி கணேசன் சிலை மாற்றப்படும். அதுவரை பழைய இடத்திலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசு கோரியுள்ள கால அவகாசத்துக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.
புதிய மணி மண்டப வேலையும் துவங்கப்படாமல், தற்போதைய இடத்திலிருந்தும் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்படுமோ என்று கவலையில் இருந்து சிவாஜி கணேசன் ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.