1
ட்டுமொத்த தமிழகத்தையும்  திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் தேவி என்ற  திருநங்கை.
“நாம் தமிழர்” கட்சியின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக  இவர் அறிவிக்கப்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம். இதற்கு முன்பு, பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை,  2014 மதுரை நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார் என்றாலும், ஒரு கட்சியின் வேட்பாளராக ஒரு திருநங்கை முதன்முதலில் அறிவிக்கப்பட்டிருப்பது  தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. தவிர சட்ட மன்ற தொகுதிக்கு நிற்கும் முதல் திருநங்கை வேட்பாளர் இவர்தான்.
patrikai.com  இதழுக்காக அவரிடம் பேசினோம்:.
உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்…
சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடிதான் என் சொந்த ஊர்.  என் கூலி வேலை பார்த்து வந்த என் அப்பா  கோவிந்தன், நான் பதினொரு மாத குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். என் அண்ணனும்  சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்.  என்னுடைய அக்காவும், அம்மாவும்தான் என்னை வளர்த்தார்கள்.
சிறு வயதில் இருந்தே  சாப்பாட்டுக்கே சிரமமான சூழல். மதிய உணவு கிடைக்குமே என்று   பள்ளிக்கூடம் சென்றேன். அப்பா வாங்கி வைத்திருந்த கடனையும்  கட்டவேண்டிய நிலை. அத்தனை சிரமமான வாழ்க்கை.
நீங்கள் ஒரு திருநங்கை என்பதை எப்போது உணரந்தீர்கள்?  உங்கள் குடும்பத்தில் அதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்?.  
12-ம் வகுப்பு படிக்கும்போதுதான், எனக்குள் இருக்கும் பெண் தன்மையை உணரத்தொடங்கினேன். அது என் உடல் தோற்றத்திலும் வெளிப்பட்டது. அப்போது பிறரது கேலி கிண்டல்களால் மிகவும் மனம் பாதிக்கப்பட்டேன்.
அந்த சமயத்தில்,  எங்கள் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது.  அவர் மூலமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.  18 வயதில் பாலினமாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினேன்.
ஆரம்பத்தில் எனது அம்மாவுக்கு வருத்தம்தான். அவருக்கு எனது நிலையை புரியவைத்தேன். பிறகு மனமார என்னை ஏற்றுக்கொண்டார்கள்.
பொது வாழ்க்கைக்கு எப்படி வந்தீர்கள்?
சிறுவயதில் இருந்தே அன்பும், உணவும் கிடைக்க சிரமப்பட்டேன். இந்த இரண்டும்தான் மனித வாழ்க்கு அடிப்படை. எனக்கு சிறு வயதில் கிடைக்காத இவை இரண்டும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். நான் சமூக சேவை பணிக்கு வந்த காரணம் இதுதான்.
சேலம் ‘தாய்’ அமைப்பிலும், ‘விழுதுகள்’ அமைப்பிலும் என்னை இணைத்துக்கொண்டு பொதுப்பணி செய்து வந்தேன். பிறகு குழந்தை கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு, ஆதரவற்றோருக்கு உதவி செய்தல் என எண் பணி விரிவடைந்தது.
பிறகு சொந்த முயறசியில் முதியோர் இல்லம் ஆரம்பிக்க நினைத்தபோது, உள்ளூருக்குள் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் எதிர்கொண்டு,   அதையும் மீறி, எங்கள் ஊரில் சொந்தமாக நிலம் வாங்கி,  ‘தாய்மடி அறக்கட்டளை’ என்கிற பெயரில் காப்பகம் ஒன்றை நடத்திவருகிறேன். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்களுக்கு உணவிட்டு பாதுகாத்து வருகிறேன். மன நிறைவாக இருக்கிறது.
3எப்படி உங்களுக்கு அரசியலின் மீது ஆர்வம் வந்தது ?
அரசியலில் ஈடுபட்டால், எனது சமூகசேவைகளை இன்னும் விரிவு படுத்தலாம், தவிர மற்ற திருநங்கைகளுக்கு நான் ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். ஆனால் அவர்களுக்கு கொள்கை ஏதும் இல்லை.
இந்த நிலையில், என்னுடைய அறக்கட்டளைக்காக நிலம் வாங்குவதற்கு பணம் சேர்க்க, சென்னையில் சிறிது காலம் பணி புரிந்தேன்.  அப்போது தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்த தோழர்களின் நட்பு கிடைத்தது. ஈழத்தமிழர் போராட்டம் பற்றி ஆர்வத்துடன் தெரிந்துகொண்டேன்.
2009 ஈழப் போரில் கொத்துக் கொத்தாக நம் உறவுகள் மடிந்தபோது, மிகவும் மனம் பாதித்தது.  தமிழ் தேசிய அரசியலின் அவசியம் புரிந்தது. அது தொடர்பான தோழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டேன். இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்ல.. தமிழகத்திலேயே தமிழும், தமிழரும் இரண்டாம் தரமாக இருப்பது புரிந்தது.
இந்த இழி நிலையைப் போக்க அண்ணன் சீமான் தலைமையை ஏற்பதே ஒரே வழி என்பதை உணர்ந்து, நாம் தமிழர் கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்.
விவாசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது, இயற்கையை காப்பது போன்ற அண்ணன் சீமானின் கொள்கைகளும், அவர் பின்னால் நான் அணிவகுக்க காரணங்களாக அமைந்தன.
தமிழகத்தின் முதல் திருநங்கை  சட்டமன்ற வேட்பாளர் என்பதை எப்படி உணர்கிறீர்கள்?
திருநங்கை என்கிற பெயரை கொடுத்ததற்கு முதலில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் இந்த சமுதாயத்தில்  பலவிதமான  அவச் சொற்களால்தான்  நாங்கள் அழைக்கப்படுகிறோம். தற்போது அந்த நிலை மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் எல்லாம் திருநங்கைகளை உறுப்பினர்களாகச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால்  அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அளிப்பதே இல்லை. எங்களையும், சக மனிதராக நினைத்து, என்னை வேட்பாளாராக அறிவித்து இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், உங்களை வேட்பாளராக அறிவித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?
அன்று  என்னை அறிமுகப்படுத்தும் முன்பு வரை, நான் திருநங்கை என்பது யாருக்கும் தெரியாது. என் பெயரை அறிவித்து , ‘தேவி – ஒரு திருநங்கை’ என்று சொன்னதுதான் தாமதம்… மக்களிடம் ஏற்பட்ட கைத்தட்டல்களால் அந்த பகுதியே அதிர்ந்தது.  அந்த சமயத்தில் என்னை அறியாமல் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வந்துவிட்டது.   திருநங்கைகள் மீதான சமுதாய சிந்தனை மாறி வருகிறது என்பதற்கு ஒரு உதாரணம்தான் அந்த கை தட்டல்கள்.

முதல்வர் ஜெயலலிதாவின்ஆர்.கே.நகரில் போட்டியிட  குறிப்பான காரணம் இருக்கிறதா ?
நான் என் சொந்த மாவட்டமான சேலம், சங்ககிரி தொகுதியில் போட்டியிடவே விரும்பினேன்.  அங்கு ஏற்கெனவே வேட்பாளர் முடிவு செய்யப்பட்டுவிட்டதால் ஆர்.கே. நகரில் போட்டியிடுமாறு சீமான் அண்ணன் கூறினார்.
2
எங்கு போட்டியிட்டால் என்ன..?  திருநங்கையாகப் பிறந்து, இந்த சமூகத்தில் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்து வருபவர்கள் பலர்.  எனக்கு அப்படி ஓர் நிலை இல்லவிட்டாலும், அனைத்து திருநங்கைகளுக்காகவும் குரல் கொடுக்க விரும்பினேன். அதற்கான வாய்ப்பாக இதை பார்க்கிறேன்.
பெரிய கட்சிகளை எதிர்த்து, வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?
நாம் தமிழர் கட்சி மட்டும் என்ன சின்ன கட்சியா? தமிழகம் முழுதும் எங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. தவிர, தி.மு.க – அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நாம்தமிழர் கட்சியைத்தான் பார்க்கிறார்கள். ஆகவே நிச்சயமாக வெற்றி பெறுவேன்.
திருநங்கைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த சமுதாயம் நம்மை பார்க்கும் பார்வை ஓரளவு மாறியிருக்கிறது. ஆனால் இந்த பார்வை முழுதுமாக மாற, நமது உழைப்பும் அவசியம். தன்னம்பிக்கையுடன் உழைத்து நாம் முன்னேறுவதே அதற்கு வழி. தன்னம்பிக்கையின் அடையாளமாக திருநங்கைகள் இருக்க வேண்டும்.
பேட்டி: டி.வி.எஸ். சோமு