தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவினர் பங்கேற்க வேண்டாம் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. ஓரளவு ஜனநாயகத்தன்மையுடன் உட்கட்சித் தேர்தல் நடத்தும் கட்சிகளுல் ஒன்றான தி.மு.க.வில் இருந்து இப்படி ஓர் அறிவிப்பு வெளியானது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான அறிவிப்பு வருமாறு:
“ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளும் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்துத பிரச்சாரம் செய்துவருது ஒரு சில ஊடகத்துறையினரின் வாடிக்கையாக இருந்துவருகிறது.
இந்நிலையில் தற்போது “நடுநிலை” என்ற பெயரை சூட்டிக்கொண்டுள்ள “தந்தி” தொலைக்காட்சி ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்துக்கு எதிராகவும் தொடர்ந்து திட்டமிட்டு பிரச்சாரம் செய்துவருகிறது.
குறிப்பாக பல்வேறு “விவாதங்கள்” என்ற பெயரில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களை வைத்துக்கொண்டு, – உண்மைக்கு மாறாக – தி.மு.க தரப்புக்கு பதிலளிக்க உரிய வாய்ப்பு அளிக்காமல் – ஆளும் அ.தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்து வருவதால் தி.மு.க, “தந்தி” தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முரசொலியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதை வரவேற்று தி.மு.க பிரமுகரான கே.ஸ். ராதாகிருஷ்ணன், தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தலைமைக் கழகத்தின் இன்றைய (27-11-2015) அறிவிப்பை ஊடகங்கள் உணரவேண்டும். குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவைத்து கேள்வி கேட்பதைப் போலவும், உரிய விளக்கங்கள் தி.மு.க சார்பில் கொடுக்க முயன்றாலும் தடுப்பதும், ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதும்தான் தொலைக்காட்சி விவாதங்களில் நடக்கின்றன.
இதற்காகவே விவாதங்களுக்கு சமீபத்தில் நான் அதிகமாகச் செல்வதும் கிடையாது.
ஒருமுறை தந்தி டி.வி விவாதத்தில் திரும்பத் திரும்ப கழகத்தை ஆளுங்கட்சியைப் போன்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். உரிய விளக்கங்களை நான் கொடுத்தபோதும், திட்டமிட்டு மறுபடியும் அதே வினாக்களைத் தொடுக்கப்பட்டது. “விளக்கங்கள் கொடுத்தபிறகும் அதே கேள்வியை எழுப்பிக்கொண்டே இருந்தபோது” நான் மைக்கை தூக்கியெறிந்துவிட்டு அந்த விவாதத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன்.
பலர் என்னிடம் இவ்வளவு கோபப்பட்டு வெளியேறிவிட்டீர்களே, தந்தி டி.வி நிர்வாகம் உங்களைத் தவறாக எண்ணிக்கொள்வார்களே என்று கேட்டபோது, அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்ல. ஊடக நண்பர்களோடு நான் நட்போடுதான் இருக்கின்றேன். அது வேறு விஷயம், ஆனால் ஒரு விவாதம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று பதில்சொன்னேன்.
இதுகுறித்து ஏற்கனவே என்னுடைய வலைதளத்தில் பதிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க. சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும் அக் கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் ஆவடிக்குமாரை
தொடர்புகொண்டு பேசினோம். அவர், “தந்தி டி.வி. நடுநிலையுடன் செயல்படுகிறது. ஆனால் அந்த நடுநிலை தி.மு.கவுக்கு பிடிக்கவில்லை. அக் கட்சி, ஊடகவியலாலர்களை சிலரை தனக்கு ஆதரவாக திருப்பி இருக்கிறது. அதே போல தந்தி டிவியையும் திருப்ப முயற்சித்து தோல்வி கண்டுவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்த விரக்தி அறிக்கை” என்றார்.
இது குறித்து தந்தி டிவியை தொடர்புகொண்டு கேட்டோம். “எதுவும் சொல்வதற்கில்லை” என்றதோடு முடித்துக்கொண்டார்கள்