சென்னை

சென்னையில் கடும் வெள்ளம் ஏற்பட்டதற்குத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளது.

சென்னை நகரில் மழை காரணமாகப் பல முக்கிய சாலைகளில் வெள்ளமாக மழை நீர் தேங்கியது.  பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் சென்னை நகர் முழுகும் அபாயம் ஏற்பட்டது.   இன்று காலை வரை சென்னை நகரில் மழை நீர் தேங்கி உள்ளது குறித்து 12937 புகார்கள் பதியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் உள்ள 26 பகுதிகளில் சுமார் 476 தெருக்கள் மழை நீர் தேங்கிப் பாதிப்பு அடைந்தன.  இங்குள்ள நீரை வெளியேற்ற பணியாளர்கள் மிகவும் முயன்றும் மழைநீர் கால்வாய்களில் நீர் செல்லாமல் இருந்துள்ளது.  அதையொட்டி கால்வாய்களில் ஒவ்வொரு பகுதி நுழைவு பகுதியும் சோதிக்கப்பட்டுள்ளது.

அவற்றை பிளாஸ்டிக் கவர்கள் அடைத்துள்ளதால் நீர் செல்ல முடியாமல் இருந்தது தெரிய வந்தது.  அரசு இந்த கவர்களை பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட நிலையில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.  இது போல் மொத்தம் 180 டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் சென்னை மாம்பலம் பகுதியில் மட்டும் அகற்றப்பட்டுள்ளன.,

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் தெருக்களில் வீசப்பட்டு  அவை குளங்கள் மற்றும் ஏரிக்கரைகளில் சேர்ந்துள்ள நிலையில் இவ்வாறு மழை நீர் வடிகால்களை அடைத்து நகரே முழுகும் அச்சுறுத்தலை விளைவித்துள்ளது.  குறிப்பாக கே கே நகர்ப் பகுதியில் ஒரே ஒரு கவர் அகற்றப்பட்ட உடன் தெருவில் தேங்கி இருந்த அனைத்து நீரும் வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.