டில்லி

டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்னும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

டில்லி யூனியன் பிரதேசமாக உள்ளதால் டில்லி அரசுக்குப் பல அதிகாரங்கள் இல்லாத நிலை உள்ளது.   யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை விட மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல முறை தெரிவித்துள்ளார்.  எனவே டில்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் மற்றும் பாஜக இருந்து வரும் நிலையில் பீகார் மாநிலக் கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் டில்லியில் கால் பதிக்கத் தொடங்கி உள்ளது.   பீகாரைச் சேர்ந்த பலர் டில்லியில் பணி நிமித்தமாக இடம் பெயர்ந்துள்ளனர்.  அவர்களின் வாக்குகளைக் கவர ஐக்கிய ஜனதா தளம் முயன்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டில்லியில் உள்ள பாதர்பூரில் நடந்த பேரணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.  அவர் தனது உரையில், ”நாட்டின் தலைநகரான டில்லி நாடு முழுமைக்கும் சொந்தமானது.   அனைத்து மாநில மக்களும் இங்கு வசித்து வருகின்றனர்.  இங்கு அதிக அளவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து இந்த பகுதியில் முக்கிய பங்கு எடுத்துள்ளனர்.

ஒரு காலத்தில் பீகாரிகளை கேலி செய்த பலரும் தற்போது பீகாரில் இருந்து வந்தவர்களைப் பெருமையாக பார்க்கின்றனர்.   இதற்கு முக்கிய காரணம் பீகாரிகளின் உழைப்பாகும். பீகாரிகள் ஒரு நாள் உழைப்பதை நிறுத்தினால் டில்லி முழுமையாக நிலை குலைந்து போகும்.

இந்த டில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.   நாங்கள் எப்போதுமே டில்லிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருக்கிறோம்.   பீகாருக்குச் சிறப்பு அந்தஸ்து தேவை என்னும் எங்கள் கோரிக்கையைப் போல் டில்லிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.