மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்த துப்புறவுப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மனிதக் கழுவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நீண்ட போராட்டங்கள் நடைபெற்ற பிறகும் இந்த அவலம் நீடிக்கிறது. நீதிமன்றங்கள் பலமுறை இது குறித்து அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளன. எனினும், அரசு நிர்வாகம் தொடர்ந்து தவறு செய்து வருகிறது.
மோடியின் மேக் இன் இந்தியாவில், கழிவுகளை அகற்ற தொழிலாளியின் கையில் ஒரு கருவி இல்லை.
மோடியின் டிஜிட்டல் இந்தியாவில், மனிதனே மனிதக் கழிவை கையால் அகற்றும் இழிவு தொடர்கிறது.
மோடியின் தூய்மை இந்தியாவில், ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள குப்பைகளைப் பெருக்குவதற்கு துடப்பம் தூக்கி வருகிறார்களே தவிர, ரயில் நிலையத்துக்கு உள்ளே தண்டவாளத்தில் கிடக்கும் மனிதக் கழிவை அகற்றுவதற்கு மோடி உள்பட எந்தப் பிரபலமும் (போஸ் கொடுக்கக் கூட) முன்வருவதில்லை.
அரசுப் பணியில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் பட்டேல் உள்ளிட்ட ஆதிக்கச் சக்திகள் ஒருவனும், இந்த கழிவகற்றும் பணியில் பங்கு கேட்பதில்லை.
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை கேள்வி எழுப்பும் ஆர்.எஸ்.எஸ் கும்பல், இந்த கழிவகற்றும் பணியில் அம்மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிரந்தர இடஒதுக்கீட்டைப் பற்றி மட்டும் கேள்வியே எழுப்புவதில்லை.
எல்லோரும் மலம் கழிக்கும்போது, எல்லோரும் மலம் அள்ளுங்கள். .. அல்லது யாரையுமே மலம் அள்ள விடாதீர்கள்
(கட்டுரையாளர் துணைப் பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.)