dauglas
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற வழக்கறிஞர் திருநாவுக்கரசு கொலை வழக்கில், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணைக்காக 1990-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வரை நீதிமன்றத்தில் ஆஜரான டக்ளஸ் தேவானந்தா பின்னர் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்ததுடன், அவரை தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும், இவ்வழக்கு விசாரணையை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த வேண்டியும் 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவனாந்தா மனுதாக்கல் செய்தார்.
இதனையடுத்து, கடந்த மார்ச் 5-ம் தேதி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராக டக்ளஸ் தேவானந்தா காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தான் ஒரு அப்பாவி என்று டக்ளஸ் கூறினார். இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று டக்ளஸ் தேவானந்தாவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.