
அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்று நம்பினார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். ஏனென்றால், பா.ம.க.வில் இருந்து பிரிந்ததில் இருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆதரித்து வருகிறார்.
இடையில் முதல்வர் ஜெயலலிதாவும் இவரை அழைத்துப் பேசினார். பேசிவிட்டு வந்தவர், “இரட்டை இலக்கத்தில் எங்கள் கட்சிக்கு சீட் கிடைக்கும்” என்றார்.
ஆனால் அ.தி.மு.க. அறிவித்த கூட்டணி கட்சிக வேட்பாளர் பட்டியலில் இவர் கட்சிக்கு இடமே இல்லை. இதனால் மிகவும் நொந்துபோயிருக்கிறார் வேல்முருகன்.
என்ன விவகாரம் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்.
வேல் முருகன், நெய்வேலியை தனக்கும், சங்ககிரியை தனது கட்சியின் துணைத்தவருக்கும் கேட்கிறார். ஆனால் அ.தி.மு.க. தரப்போ ஒரே இடம்தான் என்று சொல்லிவிட்டது. அதுவும் நெய்வேவில் தொகுதி தரமுடியாது, பண்ருட்டிதானே உங்கள் ஏரியா அங்கே நில்லுங்கள்” என்றது.
வேல்முருகனோ, “தொகுதி சீரமைப்பில் பண்ருட்டி தொகுதியில் இருந்த பல பகுதிகள் நெய்வேலி தொகுதிக்கு சென்றுவிட்டன. ஆகவே நெய்வேலியில் நிற்பதுதான் எனக்கு பாதுகாப்பு. தவிர நெய்வேலி நிலக்கரி சுரங்க தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிரமாக இயங்கினேன். ஆகவே அவர்களது ஆதரவும் எனக்கு கிடைக்கும். ஆகவே நெய்வேலியை தாருங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
இந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே தன்னிச்சையாக அ.தி.மு.க. ப்ளஸ் கூட்டணி வேட்பாளர்கள அறிவித்துவிட்டார் ஜெயலலிதா. அதனால்தான் கலங்கிப்போய் நிற்கிறார் வேல்முருகன்.
இப்போது கடைசியாக, “தமிழகத்தில் பண்ருட்டி தொகுதி மட்டும் தருகிறோம். பாண்டிச்சேரியில் ஒரு சீட் தருகிறோம். ஆட்சி அமைந்த பிறகு உங்கள் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு வாரிய தலைவர் பதவியும் தருகிறோம்” என்று தகவல் வந்திருக்கிறதாம்.
வேல்முருகன் யோசனையில் இருக்கிறாராம். அவர் ஒப்புக்கொண்டால், இன்று மாலை அல்லது நாளை முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பு நடக்கும் என்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel