r

சென்னை:  பூவிருந்தவல்லி  மதிமுக நகர செயலாளர் இரா. சங்கர் மற்றும் துணை செயலாளர்  து.முருகன் ஆகிய இருவரையும் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.  இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என  கோரி தமிழகம் முழுதும் மதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்த  நிலையில்  கட்சியிலிருந்து இரு பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக மதிமுகவில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் திடீர் திடீரென கட்சியை விட்டு விலகி திமுகவில் சேர்ந்தார்கள். மேலும் பல பொறுப்பாளர்கள் விலகி திமுகவில் சேர இருக்கிறார்கள் என்றும் தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது, திருவள்ளூர் மாவட்டம்  பூவிருந்தவல்லி  மதிமுக நகர செயலாளர் இரா. சங்கர் மற்றும் துணை செயலாளர்  து.முருகன் ஆகிய இருவரையும் அவர்கள் வகித்த பொறுப்பகளில் இருந்து நீக்கியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், ““கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டமைக்கு அவர்கள் தெரிவிக்கும் விளக்கம் தலைமைக்கழகம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாவிடில் இருவரும் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக  நீக்கிவைக்கப்படுவார்கள்”  என்றும் வைகோ  தெரிவித்திருக்கிறார்.

“பொதுவாக கட்சி நிர்வாகிகளிடம் மென்மையான போக்குடன் நடந்துகொள்கிறார் வைகோ என்ற விமர்சனம் உண்டு.  இதற்கு உதாரணமாக சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த தாமரைக்கண்ணனை சொல்லலாம்.

கடந்த சில மாதங்களாகவே கட்சிப்பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார் தாமரைக்கண்ணன். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பொறுமை காத்தார் வைகோ. இறுதியில் தாமரை, திமுகவுக்கு தாவிவிட்டார். ஆனால் இனி,  உறுதியான நடவடிக்கை  எடுக்க வைகோ முடிவு செய்துவிட்டார். அதன் வெளிப்பாடுதான்  இந்த இருவரின் நீக்கமும்.

இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரி  சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய  முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி ” புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு  ம.தி.மு.க. தொண்டர்கள் சார்பில் நன்றி” என்று  இருவரும் போஸ்டர் ஒட்டினார்கள்.   ஆகவே உடனடியாக  பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்கள்.” என்றும், “இன்று  மதிமுக இன்று நடத்திய போராட்டத்தில் இவர்கள் கலந்துகொள்ளவில்லை.   இதையடுத்து உடனடியாக   அவர்களுக்கு கெட் அவுட் சொல்லிவிட்டார் வைகோ ”  என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.