raju_10தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீடு மதுரையில் உள்ளது. இவரது ஒரே மகன் விபத்தில் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். மருமகன்களில் ஒருவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். மற்றொருவர் கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்திருந்தார். செல்லூர் ராஜூ அமைச்சரான பிறகு இவர் மற்றும் மருமகன்கள் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்துள்ளதாக மதுரை மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அமைச்சரின் எதிர்கோஷ்டியினர் தலைமைக்கு புகார் அனுப்பிய வண்ணம் இருந்தனர். மேலும், இவர் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் இருவரிடம் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செல்லூர் ராஜூ சேர்த்த சொத்துக்கள் குறித்து விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதுரை வந்தனர். இவர்கள் செல்லூர் ராஜூ மற்றும் அவரது மருமகன்களின் சொத்து விபரங்களை சேகரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் எங்கெங்கு சொத்துக்களை வாங்கி உள்ளனர்? பினாமி பெயர்களில் பதிந்துள்ளனரா? ஏற்கனவே உள்ள சொத்து விபரங்கள், சாதாரண ஆட்டோ டிரைவர், கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருந்த மருமகன்களிடம் இவ்வளவு சொத்து குவிந்தது எப்படி என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. திடீர் விசாரணையால் செல்லூர் ராஜூ மன உளைச்சல் அடைந்துள்ளார்.
இதனால் நிம்மதி தேதி, இன்று காலை இவர் மட்டும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார். அங்கு ஆண்டாள், பெரியபெருமாள் சன்னதியில் மட்டும் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தரிசனம் செய்தார். பொதுவாக கிழக்குப்புற சன்னதி கொண்ட ஆண்டாள் கோயிலில், நீண்ட நேரம் தரிசனம் செய்தால் ‘நினைத்தது நிறைவேறும்’ என்பது ஐதீகம். இதனாலேயே செல்லூர் ராஜூ நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டு தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.