முதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த வழக்குரைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
உதகையைச்சேர்ந்தவர் வழக்குரைஞர் ஸ்ரீதர். ம.தி.மு.க.வை சேர்ந்த இவர், உதகை ஸ்ரீதர் என்ற பெயரில் முகநூலில் எழுதி வருகிறார். இவர் கடந்த 10-ஆம்தேதி தீபாவளி அன்று தனது முகநூல் பக்கத்தில், முதல்வர் ஜெயலலிதாவை கிராபிக்ஸில் சித்திரித்து தீபாவளி வாழ்த்து பதிந்ததாக கூறப்படுகிறது.
இந்த படம், ஜெயலலிதாவை அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று உதகை நகர அதிமுக செயலாளர் டி.கே.தேவராஜ் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து , ஸ்ரீதர் மீது அவதூறு செய்தல், பெண்களை இழிவுபடுத்துதல், வன்கொடுமை உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீதரை, உதகை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.