nandhini

சென்னை:

கொடநாடு சென்று முதல்வரின் வீட்டு முன்னர், மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தையுடன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மதுரை சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்த்இருவரும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்களில் பமுறை கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் கொடநாட்டில், முதல்வர் ஜெயலலிதா தங்கியிருக்கும் மாளிகை முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக புதன்கிழமை கோத்தகிரியில் துண்டுப் பிரசுரங்களை இருவரும் விநியோகித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் இருவரையும் கோத்தகிரி காவல் நிலையத்திற்கும், பிறகு குன்னூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். விசாரணைக்குப் பிறகு, அவர்களுக்கு காவல் துறையினர் உணவு அளித்தபோது அதை ஏற்க இருவரும் மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் இருவரையும் வெள்ளியன்று இரவு விடுவித்தனர்.

மறுநாள் சனிக்கிழமையன்று இரவு இருவரும் கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார்கள். இதுகுறித்து தகவலறிந்த புதூர் போலீஸார் இருவரையும் கைது செய்து வீட்டில் சிறை வைத்தனர்.

டாஸ்மாக்கை மூடக்கோரி போராட்டம் நடத்திய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள் பலர், நந்தினியும் அவரது தந்தையும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டது பற்றி கருத்துச் சொல்லவில்லை.

Patrikai.com இதழுக்கு பேட்டி அளித்த ஆனந்தன், மதுவிலக்குக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, “மதுவிலக்கு போராளி அய்யா சசிபெருமாள் இறுதிச் சடங்கின்போது அரசியல் தலைவர்கள் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ளவே முயற்சித்தார்கள்” என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.