தமிழக சட்டசபைக்கு மே 16-ந் தேதி ஒரேநாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந் தேதி மனு செய்ய கடைசி நாள் ஆகும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தனது தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டார்.
நேற்று முன்தினம் மதியம் ஒரே நாளில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளார்.
அ.தி.மு.க-227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.என்றாலும் 234 வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. வரலாற்றில் 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன் எம்.ஜி.ஆர். காலத்தில் கூட, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் என தொடர்ந்து சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டு வந்தன.
இந்த தேர்தலில் முதல் முறையாக 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் நிற்கிறார்கள். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சட்டசபை மற்றும் கட்சி கூட்டங்களில் ஜெயலலிதா பேசுகையில் 234 தொகுதியிலும் வெற்றி என்பதே நமது இலக்கு என கூறிவந்தார். அதன்படி 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. பட்டியலில் எதிர்பார்த்தபடி புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 153 பேர் புதுமுகங்கள். இதில் 80 பேர் மாநகராட்சி துணைமேயர், நகராட்சி தலைவர் என உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக உள்ளவர்கள்.
139 பேர் பி.இ. உள்ளிட்ட பட்டதாரிகள் ஆவார்கள். 5 பேர் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள், 31 பேர் பெண் வேட்பாளர்கள், பெண்களுக்கு வேட்பாளர் பட்டியலில் 7.5 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் அதில் இடம் பெற்ற அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி தலைவர்கள் பலர் நேற்று முன்தினம் மதியமே சென்னை புறப்பட்டு வந்தனர்.
234 வேட்பாளர்களும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுகிறார்கள். அதன்பிறகு 234 வேட்பாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.