அமராவதி
ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பெரிதும் உதவி உள்ளார்.
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகினார். அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்னும் பெயரில் புதுக்கட்சியை தொடங்கினார். இவர் கட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்த போதிலும் கடந்த 2014 தேர்தலில் அக்கட்சி ஆட்சியை பிடிக்க இயலவில்லை.
அந்த் தேர்தலில் 45.4% வாக்குகள் பெற்று ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி 66 இடங்களை பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 48.2 % வாக்குகள் பெற்று 103 இடங்களை வென்றது. ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதை தவற விட்ட ஜெகன் மோகன் ரெட்டி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
தேர்தல் வித்தகர் என புகழப்படும் பிரசாந்த் கிஷோர் இம்முறை ஜெகன் மோகன் ரெட்டிக்கு அரசியல் ஆலோசகராக நியமிகப்பட்டிருந்தார். பிரசாந்த் கிஷோர் கடந்த 2012 ஆம் வருடம் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் பாஜகவுக்காக பணி புரிந்து மோடியை முதல்வராக்கினார். அத்துடன் அவர் 2014 மக்களவை தேர்தலில் மோடிக்காக பணியாற்றி அவரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.
கடந்த 2015ல் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் கூட்டணிக்காக பணி ஆற்றிய பிரசாந்த் கிஷோர் மூலம் அந்த கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. அது மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாந்த் கிஷோர் பணி ஆற்றினார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆந்திர சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்தார். பிரசாந்த் கிஷோரின் ‘இந்திய அரசியல் செயல் குழுவின்’ (ஐபிஏசி) 400 ஊழியர்கள் ஆந்திராவில் முகாமிட்டு வார்டு அளவில் தேர்தல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த குழுவினரின் ஆய்வுகளின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோர் பிரச்சார வியூகத்தை வடித்துக் கொடுத்தார். அதை ஜெகன் மோகன் ரெட்டி அப்படியே பின்பற்றினார். பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி ‘பிரஜா சங்கல்ப யாத்திரா’ பேரணியை நடத்திய அவர் 15 மாதங்களில் 3,000 கி.மீ. பயணம் செய்து இரண்டரை கோடி மக்களை சந்தித்தார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ‘ஜெகன் அண்ணா அழைக்கிறார்’, ‘உங்களை நம்பமாட்டோம் பாபு’, ‘பை-பை பாபு’ ஆகிய வாசகங்களுடன்கூடிய பிரச்சாரம், ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை அந்த கட்சிக்கு அள்ளிக் கொடுத்துள்ளது. தற்போது ஆந்திர சட்டப்பேரவையின் 175 தொகுதிகளில் 151-ஐ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
நாயுடுவின் தெலுங்கு தேசத்துக்கு 23 தொகுதிகளும், பவன் கல்யாணின் ஜனசேனாவுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்துள்ளன. ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளில், 22 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அரசியல் வித்தகர் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகத்தால், ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.