டில்லி
சமீபத்தில் அமுலான ஜிஎஸ்டி யினால் உலகிலேயே அதிக வரிவிகிதம் உள்ள நாடாக இந்தியா உள்ளது
கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி அமுலாக்கப்பட்டது தெரிந்ததே. அதன்படி தற்போது நமது நாட்டில் நான்கு வகை வரிமுறைகள் உள்ளன : 5%, 12%, 18% மற்றும் 28%. உலகின் எந்த நாட்டிலும் அதிக பட்ச வரி 28% அளவுக்கு இல்லை. அதன் மூலம் அதிக வரிவிதிப்பைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
அர்ஜெண்டினாவில் அதிகபட்ச வரிவிதிப்பு 27% ஆக இருந்து வந்தது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஜிஎஸ்டி எனப்படும் ஒரு நாடு, ஒரே வரி என்னும் நிலைமை உள்ளது. அதே நேரத்தில் அந்த நாடுகளில் இந்தியா அளவுக்கு ஏழைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் ஃபிரான்ஸ் நாட்டில் ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்டது. பின்பு அதை பல நாடுகளும் பின்பற்றத் தொடங்கின. தற்போது உலக நாடுகளில் 140 நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதில் பல நாடுகளிலும் ஜிஎஸ்டி முதலில் அமுல் செய்யப்பட்ட விகித்தத்தில் இருந்து பலமுறை குறைக்கப்பட்டது.
தற்போது முக்கிய நாடுகளில் உள்ள அதிகபட்ச வரி :
கனடா – 13% – 15%
ஃபிரான்ஸ் – 20%
பிரிட்டன் – 20%
நியூசிலாந்து – 15%
மலேசியா – 6%
சிங்கப்பூர் – 7%
மேற்கூறிய நாடுகளில் கனடா போன்ற சில நாடுகளில் இரு ஜிஎஸ்டி முறை உள்ளது. (மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி என இரு வரி விதிப்பு), இந்தியாவும் இதைப் பின்பற்றி இருவகையில் மாநில ஜி எஸ் டி, மற்றும் மத்திய ஜி எஸ் டி என இருவகை வரி விதிக்கிறது.