தரங்கா சமணர் கோயில்
தரங்கா சமணர் கோயில் (Taranga (Jain Temple), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெகசானா மாவட்டத்தின் கெராலு நகரத்தின் தரங்கா மலையில் அமைந்த சமணத் தீர்த்தங்கரர்களின் கோயில் வளாகம் ஆகும். தரங்கா சமணக் கோயில், சமணர்களின் இரு பிரிவினர்களான திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்களுக்குப் புனிதத் தலமாக விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கும் இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது.
அஜிதநாதர் கோயில், தரங்கா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்
தரங்கா, கெராலு, மெகசானா மாவட்டம், குஜராத்
சமயம்
சமணம்
தரங்கா சமணக் கோயில் வளாகத்தில், 14 சுவேதாம்பர மற்றும் 5 திகம்பர சமணர் கோயில்கள் உள்ளது. சமணத்திற்கு மதம் மாறிய சாளுக்கிய வம்ச மன்னர் குமாரபாலனின் (1143 – 1174) ஆட்சியின் போது இவ்வளாகத்தில் முக்கியக் கோயில் கட்டப்பட்டது. தரங்கா, சமணர்களுக்கு மட்டுமல்லாது பௌததர்களுக்கும் புனிதத் தலமாக உள்ளது. தரங்கா சமணக் கோயில் வளாக மையத்தில் சமணத் தீர்த்தங்கரரான அஜிதநாதரின் 2.75 மீட்டர் உயரமுடைய பளிங்குக் கல் உருவச் சிலை அமைந்துள்ளது.
இக்கோயில்கள் வெள்ளை மணற்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
தரங்கா மலையின் வடக்கில் 2.5 கி மீ தொலைவில் தரங்கா மாதாவின் கோயில் அமைந்துள்ளதால், இம்மலைக்கு தரங்கா எனப் பெயராயிற்று.மேலும் பௌத்த சமய தேவதையான தரங்காவின் உருவச்சிலை இருப்பதால் இவ்விடத்திற்கு தரங்கா என பெயராயிற்று.
தரங்கா சமணர் கோயில் வளாகத்தில் 230 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்ட பரப்பின் நடுப்பகுதியில் அமைந்த முக்கியக் கோயில் 50 அடி நீளமும், 100 அடி அகலமும், 142 அடி உயரமும் (15 மீ – 30 மீ – 43 மீ), 639 சதுர அடி (195 ச மீ). சுற்றளவும் கொண்டது. இக்கோயில் ஏழு விமானங்களைக் கொண்டது.
முக்கியக் கோயிலில் சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரரான அஜிதநாதரின் வெள்ளைப் பளிங்குக் கற்சிலையும், கோயிலின் வலப்புறத்தில் ரிஷபதேவரின் காலடிச் சுவடுகளும் மற்றும் 20 தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகளும் அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலில் சமண பத்மாவதி மற்றும் மன்னர் குமாரபாலனின் உருவச்சிலைகளும் உள்ளது.