thangabalu-asok-photi-1

 

காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவரான தங்கபாலு, தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை மாற்றியே ஆக வேண்டும் என்று டில்லி வரை படையெடுத்து சென்றுவந்துவிட்டார்.  மேலிடத்திலோ, “இப்போதைக்கு மாற்றமில்லை” என்று சொல்லப்பட்டுவிட்டதாம்.

இதற்கிடையே, “தலைமைப் பதவிவகிப்பவர் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்” என்று தங்கபாலு சொல்ல, “நேர்மை மற்றும் ஒழுக்கத்தை பற்றி பேச தங்கபாலுக்கு யோக்கியதை இல்லை” என்று பதிலடி கொடுத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலுவின் வருமானம், வழக்குகள் பற்றி எல்லாம் வரிசையாக பட்டியலிட்டார்.

இதனால் மனக்காயம்பட்ட தங்கபாலு இன்று, பத்திரிகையாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார். அப்போது, “கட்சிக்காக முதன் முதலில் துவங்கப்பட்ட டிவி எனது மெகா டிவிதான்” என்றார். இதைக் கேட்டு கட்சிக்காரர்கள் சிரிக்கிறார்கள்.  “டில்லியில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது, அடித்து (யாரையோ) பிடித்து  மேடைக்கு ஏறினார் தங்கபாலு. மேடையில் இருந்த சோனியா புரியாமல் பார்க்க…  தன் கையில் ரெடியாக வைத்திருந்த மெகாடிவி வார்த்தை இட்ட போர்டை வைத்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டார்.  ஒரு நிமிடத்துக்குள் இது முடிந்தது. மற்றபடி இவர் டிவி துவங்கியிருப்பதே சோனியாவுக்கு தெரியாது” என்கிறார்கள் கட்சியில்.

இன்று அளித்த பேட்டியில் “கட்சிக்காகவே  மெகா டிவி தொடங்கி நடத்தி வருகிறேன்” என்று மீண்டும் அழுத்திச்  சொன்னார்.

இதில் காமெடி என்னவென்றால், மற்ற தொலைக்காட்சிகள் இது குறித்த செய்திகளை வெளியிட்டன.. சில டிவிக்கள் நேரலையும் செய்தன. ஆனால் தங்கபாலு நடத்து மெகா டிவியில்  “மனதோடு பேசு” என்ற பெண்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

“இதுதான் கட்சி செய்திகளை இவரது டிவியில் ஒளிபரப்பும் அழகா” என்று கிண்டலடிக்கிறார்கள் காங்கிரஸில்!