மதுரை
பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்கள் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தற்போது சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறை நடைபெறும் இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான விளம்பரங்களில் அவர் புகைப்படம் இடம் பெறாதது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்த செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தினை தாங்களாகவே ஒட்டினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருசாரார். மோடியின் படத்தின்மீது கருப்பு வண்ணம் பூசி அவர் முகத்தை மறைத்தனர். இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், “44 ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும். தமிழக அரசு இந்த படங்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஜனாதிபதி , பிரதமர் பட விளம்பரம் சேதப்படுத்தப்பட்டால் அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.