பாரிஸ் –
செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்ந்த தடயம் குறித்து ஆராய ஆளில்லா விண்கலத்தை ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த திங்கள் கிழமை செலுத்தின.
‘எக்ஸோ மார்ஸ் 2016’ என்ற இந்த ஆய்வுத்திட்டம் இரு கட்டங்களைக் கொண்டது. அதன் முதல்கட்டமாக கஸகஸ்தான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ரஷ்யாவி புரோட்டான் ராக்கெட் ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி வைத்துள்ளது.
பூமியிலிருந்து 496 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க்கிரகத்தை இந்த ஆளில்லா விண்கலம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலகத்தில் ஆய்வுக்குத் தேவையான அனைத்து உயர் தொழில் நுட்பக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலத்தின் முக்கியபப்ணியாக செவ்வாய்க்கிரகத்திலிருந்து புகைப்படம் எடுத்து அனுப்புதல், அங்குள்ள காற்றினை ஆய்வு செய்தல் ஆகியவை இருக்கும்.
இரண்டாம் கட்ட ஆய்வுக்கான விண்கலம் நிதிப்பிரச்சினையால் தாமதமாகலாம் எனத் தெரிகிறது. எப்படியும் 2018 ஆம் ஆண்டில் அடுத்த ஆய்வுக்கான விண்கலம் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அனுப்பப்பட்டுள்ள விண்கலம் சரியான திட்டமிடலுடனும் எதிர்பார்ப்புகளுடனும் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக செவ்வாய்க்கிரகத்தில் மீத்தேன் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்கான சிறப்புக் கருவியும் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்தில் மீத்தேன் இருந்ததாக கண்டறிந்து விட்டால், அங்கு உயிரினஙள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துவிடலாம் என இருநாட்டு விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளது.