oo

முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணனை  பிரபாகரன் என்ற அறந்தாங்கி இளைஞர் செருப்பால் அடித்த விவகாரம்தான் இப்போது சமூகவலைதளங்களின் ஹாட் டாபிக்.

பிரபாகரனின் செயலை ஆதரித்தும் எதிர்த்தும் பலரும் எழுதிவருகிறார்கள்.

அவர்களில் பிரபாகரனின் செயலை கண்டித்து எழுதிய ஞாநி சங்கரனின் பதிவு:

மை ஊற்றுபவர், ஷூ வீசுபவர், செருப்பு எறிபவர், வீடு புகுந்து துப்பாக்கியால் சுடுபவர் என்று எந்த வடிவத்தில் வந்தாலும், எந்த கோட்பாட்டின் பெயரில் வந்தாலும், பாஸிஸ்ட்டுகளே…… அத்தகையோர் ஜனநாயகவிரோதிகளே ஆவர்.

பிரபாகரனின் செயலை ஆதரித்து எழுதிய திருமுருகன் காந்தியின் பதிவு:

வலிமையான அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் எளிய வடிவமாகவே செருப்புகளை பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் மீது வீசுகிறார்கள்.

இந்த செருப்பு அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ், இந்தியாவின் ப.சிதம்பரம் எனப் பலரின் மீது இது வீசப்பட்டிருக்கிறது.

ஈராக்கியனுக்கும், சீக்கியனுக்கும் இருக்கும் அதே வலிதான் தமிழனுக்கும் இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டி இருக்கிறார் தோழர்.பிரபாகரன் அவர்கள்.

ஈழவிடுதலை ஆதரவு களம் இன்னும் தமிழகத்தில் செத்துவிடவில்லை , ஈழம் முடிந்துபோன களமாகவும் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறது.

இதை வன்முறையாகவும், தாக்குதலாகவும் சித்தரிக்க பலர் கிளம்பி இருக்கிறார்கள். அரசு நிகழ்த்திய இனப்படுகொலையின் போது வாய்மூடி வேடிக்கை பார்த்த நபர்களுக்கு இந்த குறைந்த பட்ச எதிர்ப்பு அச்சமூட்டுவதாகவே இருக்கும். இந்த செருப்புகள் தங்களை நோக்கி பறந்து வரும் கனவுகள் நேற்றிரவில் அவர்களது உறக்கத்தினை கலைத்திருக்கும்.

அரச பயங்கரவாதத்தினை எள்முனையளவு கூட எதிர்க்காதவர்கள், அரச பயங்கரவாதத்தின் பிரதிநிதிகள் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும். இந்த ஒட்டுண்ணிகளே தமிழகத்தின் பிரதான எழுத்தாளராக-பத்திரிக்கையாளராக ஆளும்கட்சியுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள். தாங்கள் சார்ந்து இருக்கும் அதிகாரவர்க்கத்தின் மீது பாதிக்கப்பட்டவனின் கோபம் தீவிரமடையும் பொழுதில் தனது பிழைப்பில் மண்விழுவதை கண்டு பொருத்திருக்க முடியாது இவர்களால்.

தி இந்துவில் தொடர் கட்டுரை எழுதுவதும், தி இந்துவின் வலிமைவாய்ந்த பார்ப்பன வலையில் சிந்தி கிடக்கும் உணவுத்துகள்களுக்காக தனது அறிவுத்திறமையை விற்பனை செய்யும் நபர்களே இந்த எதிர்ப்பினை கண்டு கொதிப்படைந்திருக்கிறார்கள். அடுத்துவரும் தேர்தலில் தி இந்து பத்திரிக்கை தங்களுக்கான பிரச்சார பீரங்கியாக செயல்படுவதை பயன்படுத்திக் கொண்டு அதிகாரவர்க்கத்தின் காலை நக்கிப் பிழைக்க காத்திருக்கும் இந்த சோ-கால்டு கவிஞர்களுக்கு இந்த எதிர்ப்பு குலைநடுங்க வைத்திருக்கிறது.

ஒரு சாமானியன் பலம்பொருந்திய இந்திய அதிகார வர்க்கத்தின் மீது காறி உமிழ்திருக்கிறான். இந்த சாமானியத் தமிழன் ஒட்டுமொத்த ஒட்டுண்ணிகளை நமக்கு அடையாளமும் காட்டி இருக்கின்றான்.

வெளியில் மாட்டிறைச்சிக்கு ஆதரவு தெரிவித்து , உள்ளரங்கில் பார்ப்பனிய பயங்கரவாதத்தினை கடைபிடிக்கும் தி இந்துவை எதிர்த்தால், ‘கடந்தவருடம் வெளியான தகவலுக்கு இன்று ஏன் போராட்டம்’ என கிரிமினல் மூளை, அவர்களது தலைமையைப் போலவே யோசிக்கிறது. 60 வருடத்திற்கு முன் ரயில் ஓடாத தண்டவாளத்தில் வைத்த தலையை இன்றும் காது கிழிய கிழிய பாட்டு போட்டு கதறும் கும்பலுக்கு ஒரு வருட முந்திய நிகழ்வும், கடந்த மாத புத்தகத்தில் முற்போக்கு அழுகாச்சிகாவியம் எழுதியதையும் தொடர்புபடுத்தி போலிகளை அம்பலப்படுத்தப்படுவது சற்று உதறலை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் இல்லைதான்.

இந்த செருப்புகள் நாளை இந்த போலிகளை நோக்கியும் பறந்து வருவதற்குரிய அனைத்து நியாயத்தினையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு , ‘பிரபாகரன் தொல்லையாகத்’ தெரிவதில் வியப்பில்லை.

தன்னெழுச்சியாக நடந்த இந்த நிகழ்வு தமிழகத்தின் மனநிலையை பதிவு செய்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள மறுத்தால், வரலாற்று போக்கினை சரியான முறையில் அவதானிப்பது இயலாமல் போகும்.

பிரபாகரனே தமிழகத்தின் மனநிலை