A_building_in_Chennai

சென்னை: நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில்  எந்த வித முன்னறிவிப்பும் இன்றி  செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக அரசு தான் சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான ராஜீவ் ராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில் கூறியுள்ளதாவது:

“சென்னையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் கமிஷன் ஒன்று அமைத்து விசாரிக்க வேண்டும். எந்த முன் அறிவிப்பும் இன்றி உபரி நீர் திறந்து விட்டதால்தான் பெரும் வெள்ளம் ஏற்படுவதற்கும், அழிவிற்கும் காரணம். அணைக்கு எந்தளவிற்கு நீர் வருகிறது எந்தளவிற்கு வெளியேற்றப்படுகிறது என்று ஒருவர் தொடர்ந்து கவனித்து வந்து இருக்க வேண்டும். தாமதமாக செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நீர் திறந்ததால்தான் இந்த நீர் அடையாற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

இந்த அணையில் இருந்து 39,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருக்கும்போது நீரை திறந்தது பலருக்கும் தெரியவில்லை.  உறங்கிக் கொண்டு இருந்தனர். நடு இரவில் விடப்பட்ட எச்சரிக்கையால் எந்த பலனும் இல்லை.

பொதுப் பணித்துறை அதிகாரிகள் நவம்பர் 29ஆம் தேதி செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதற்கு அனுமதி கோரி உள்ளனர். ஆனால், அவர் அதற்கு 3 நாட்கள் வரை அனுமதி கிடைக்கவில்லை. டிசம்பர் 1 ஆம் தேதி நடு இரவில்தான் அனுமதி கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

நிலைமையை நன்றாக தெரிந்து இருந்தும் தலைமைச் செயலாளர் செயல்படாமல் இருந்திருக்கிறார்.  இவர்களது அஜாக்கிரதை தான் 280 பேர் இறக்கவும் ஏராளமானவர்களின்  சொத்துக்கள் சேதமடையவும் காரணமாக இருந்தது.. இதை மனிதக் கொலை என்றுதான் கூற வேண்டும். ஒரு கமிஷன் அமைத்து தவறு செய்த அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்

இந்தக் கமிஷனில் அரசு அதிகாரிகள் தொழில்நுட்பக் கலைஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள்  அறிவியல் அறிஞர்கள், சுற்றுப்புற ஆர்வலர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வுகள் முடித்து எடுக்கக் வேண்டிய நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதே போல தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் என்பவரும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.