டில்லி:
சமீபத்தில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசே காரணம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மேலவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, சமீபத்திய வெள்ளம், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். சி.பி.எம். உறுப்பினர் டி.கே. ரங்கராஜனும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பதில் அளித்தார். அப்போது அவர், “கட்டிடங்கள் கட்டியதில் திட்டமிடாததும், நீர்நிலைகள் , நீர்வழித்தடங்கள் மீது ஆக்கிரமிப்பும் , மூடப்பட்டதும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று நாளைக்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததை அலட்சியப்படுத்தியதும், முன்னெச்சரிக்கை இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதும் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் ” என்று தெரிவித்தார்.
வெள்ளத்துக்குக் காரணம் அரசின் நிர்வாகக் கோளாறு இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வெள்ள நிவாரணத்தையும் தமிழக அரசு சிறப்பாக செய்தது என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட ஆளும்தரப்பினர் கூறி வரும் நிலையில் மத்திய அமைச்சர், இப்படி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.