சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரில் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள் இடிக்கப்படும் என  மாநகராட்சி உறுதி  அளித்துள்ளது.

பிலோமின்ச்ச் ஷோஜனார் என்பவர் சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள தேவாலயத்தில் உரிய திட்ட அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை ஐஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தவிர தற்போது வழிபாட்டுத்தலமாக பயன்படுத்தப்பட்டு வரும் திருமண மண்டபம், மணிக்கூண்டு மற்றும் குடியிருப்புகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகவும், அத்துமீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டுமானங்களை இடிக்கவும், புதிதாக எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,

‘எந்த அனுமதியும் பெறாமல் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கிறிஸ்துவ ஆலயத்தை சீரமைக்கும் நோக்கில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்த கிறிஸ்துவ ஆலய கட்டுமானப்பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மார்ச் 22-ந்தேதி ஆய்வு செய்தபோது, உரிய திட்ட அனுமதி பெறாமல் புதிதாக நுழைவு வாயில், மணிக்கூண்டு ஆகியவையும், சில குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து மணிக்கூண்டு கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எஞ்சிய சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படடுள்ளது”

என்று தெரிவித்தார்.

நீதிபதிகள், இதனை பதிவு செய்து கொண்ட 3 மாத காலத்தில் இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்