சென்னை:
நேற்றும் இன்றும் சென்னை உட்பட பல ஊர்களில் மழை இல்லை. பல நாட்களுக்குப் பிறகு சூரியன் வெளியே வந்திருக்கிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐம்பதாயிரம் பேர், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். ஏரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வெள்ள நீர் வடிய வழியில்லை. தவிர, நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருவதால், நீர் வழித்தடங்கள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகள் மற்றும் மொட்டை மாடிகளில் பரிதவிப்பவர்களை ஹெலிகாப்டர் மற்றும் படகு சர்வீஸ் மூலம் மீட்கும் பணி தொடர்கிறது.
சுமார் , ஒரு லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறியவர்களை தவிர, வீடுகளில் முடங்கிய, ஐம்பதாயிரம் பேர், வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வேளச்சேரி, வில்லிவாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை, முப்பதுக்கும் மேற்பட்ட படகுகள் மூலம், மீட்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.
சென்னை புறநகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர், பொழிச்சலுார், சேலையூர் பகுதிகளில் மட்டும், சுமார் பத்தாயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
அப்பகுதிகளில் படகு செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் அதிகளவில் உள்ளதால், விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம், மக்கள் மீட்கப்படுகின்றனர். நேற்று மதியம் வரை, 450 பேர் மீட்கப்பட்டுள்ளனர். செஞ்சிலுவை சங்கம், கடற்படை, தொண்டு நிறுவனங்கள் மூலமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீனவர்கள் உதவியுடனும், மீட்புபணி தொடர்கிறது.