சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரின் பணியிட மாறுதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வேறு மாநிலத்திற்கு பணி மாறுதல் ஆகப்போவதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளன. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆந்திரா- தெலுங்கானா மாநில உயர்ந்திமன்றத்திற்கு நீதிபதி ராமசுப்பிரமணியன் பணி மாறுதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி ஆர்.சுதாகர் ஜம்மு- காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்திற்கு பணி மாறுதல் செய்யப்படுவது இன்னும் பரிசீலனையில் உள்ளது என்றும் நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் திடீரென பணியிட மாற்றம் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமுதாய நலனுக்காக பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை அளித்த அவர்களது பணி, சென்னையில் தொடர வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் சாதிய அமைப்பு, குழுரீதியாக செயல்படும் சில விரும்பத்தகாத சூழல் இருப்பதால் இங்கு பணிபுரிய விரும்பாமல் இவர்கள் மாறுதல் கேட்டிருப்பது போன்ற கருத்தை இது ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை. இந்த சூழலில் இவர்களும் மாறுதல் பெற்றுச் சென்றால் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, அவர்களது மாறுதல் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.