gr
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்திய நாடு முழுவதும் நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என்று உருவாக்கி அவற்றில் எல்லாம் கட்டண வசூலிப்பு என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கான சட்டத்தை முந்தைய பாஜக அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் இப்போது கட்டண உயர்வை எதிர்க்கிற திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது சட்டமசோதாவை ஆதரித்தன. இப்போதும் கூட பாஜக, திமுக போன்ற கட்சிகள் தங்களின் இமாலய சாதனையாக அவ்வப்போது நான்குவழிச்சாலை நாங்கள் போட்டோம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்ட போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரி கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. இன்று நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விலைவாசி மொத்த குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை ஏற்றிக் கொள்வதற்கு அந்த சட்டம் வழிவகை செய்தது. நாளுக்கு நாள் மக்கள் மீது தொடர் சுமையை இந்த சுங்க கட்டணம் கூடுதலாக ஏற்றி வருகிறது. கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசு பேருந்து போக்குவரத்துக் கழகங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
ஏற்றப்படும் சுங்க கட்டணத்தை பெரும்பாலும் பொதுமக்களே ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இத்தகைய நிலைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட அனைத்து பகுதி மக்களும் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது மத்திய அரசாங்கம் இந்த கட்டணம் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் சுங்கச்சாவடிகளை படிப்படியாக கைவிடவும் ஒப்புக் கொண்டது. ஆனால் தற்போதுள்ள பாஜக அரசின் வழக்கமான வாக்குறுதி போல இதைப்பற்றியும் அந்த அரசு கவலைப்படவில்லை. நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்களும், வாகன உரிமையாளர்களும் போராட்டங்கள் நடத்திய பிறகு சில சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்க கட்டண உயர்வை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக சுங்க கட்டண விகிதங்களை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்; எதிர்வரும் காலங்களில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றும் முறையில் உரிய மாற்றங்களை மத்திய சட்டத்தில் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்..