சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிப்பவர்கள் அந்த பணத்தை பிடித்தும் கொடுக்கட்டும் என்று மறைமுகமாக வைகோவைத்தாக்கி திருச்சியில் இ.கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன் திருச்சியில் பேட்டி அளித்தார்.
மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோ, ” சென்னை சிறுதாவூரில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கட்டுக்கட்டாக பணம், கண்டெயினர் லாரிகளில் வந்து இறங்கியிருக்கின்றன. அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கவே வைக்கப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதே ம.ந.கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், “சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிப்பவர்கள் அந்த பணத்தை பிடித்தும் கொடுக்கட்டும்” என்று பேசினார்.
கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கிடையே வெளிப்படையாக நடக்கும் இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தா.பாண்டியனை தொடர்புகொண்டு இது பற்றி கேட்டோம். அதற்கு அவர், “ஆமாம்! இப்போது ஜெயலலிதா பெட்டி பெட்டியாக பணம் அடுக்கி வைத்திருக்கிறார் என்பவர்கள், நாளை, அந்தம்மா என்னிடம் பணம் கொடுத்து வைத்திருப்பதாகவும் சொல்வார்கள். அதற்காத்தான் அப்படிச் சொன்னேன். ஆணித்தரமாக சிறுதாவூர் பங்களாவில் பணம் இருக்கிறது என திரும்பத் திரும்ப சொல்கிறவர்கள், அங்கே போய் பணத்தைப் பறிமுதல் செய்து தேர்தல் கமிசனிடம் கொடுக்க வேண்டியதுதானே” என்றார்.
மேலும் நாம் சில கேள்விகளை முன்வைத்த போது, “இது போதும். வேறு சந்தர்ப்பத்தில் பேசலாம்” என்று கூறிவிட்டார்.