tn-gopalan-story-n

(முந்தைய பகுதி:   வயதான மனிதர் ஒருவர் விபத்தில் இறக்கிறார். பிரேதப் பரிசோதனையில், அவருடைய உடலிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரற்ற வண்ணத்துப் பூச்சிகள் வெளிப்படுகின்றன. பரபரப்பு ஏற்படுகிறது. சம்பவம் குறித்து ஆராயும் நண்பர்கள் சிலர், இறந்தவர் தங்கியிருந்த லாட்ஜின் மானேஜரை சந்திக்க ஏற்பாடு நடக்கிறது.  இனி…. )

சிறிது நேரம் லாட்ஜ் முதலாளியிடம் பேசிய பிறகு, வக்கீல் ஆவலுடன் காத்திருந்த நண்பர்களிடம் சொன்னார்: ”தம்பிங்களா..நைட் வர்ராருப்பா மானேஜர்…ஓனருக்கு ஒண்ணும் பெருசாத் தெரியல்ல..ஏதோ ரெண்டு மூணு தடவை பாத்திருக்கிறாரு… அவ்வளவுதான்……மானேஜர்தான் பட்டாம்பூச்சி ஆளுக்கு நெருக்கம், அட பாருய்யா பேரைக்கூட கேக்கவுட்டுட்டேன்…இல்லியே விஸ்வநாதனோ ஏதோ சொன்னாரே…ஒரு வேளை விஸ்வநாதங்க்றது மானேஜரோ…”

”அய்யோ விடுங்க சார் அது அவ்வளவு முக்கியமா…” சேது கத்தியே விட்டான். அப்புறம் சுதாரித்துக்கொண்டு அவன் சொன்னான். – “சாரி சார்…நாங்க மானேஜரப் பாக்கணும் அவ்ளோதான்….அநாதப் பொணத்து வயித்துல பட்டாம்பூச்சி…அந்தாளுக்காக அழுவறதுக்கும் ஒரு ஆளு…விஸ்வநாதனோ, ராமநாதனோ…அந்தாளைக் கட்டாயம் பாத்தா பெரிய கதையே கிடைக்கும் சார் விடக்கூடாது…அது சரி சார்..எல்லாம் டிவில வந்தபோதெல்லாம் தெரிஞ்சிக்காம 4, 5 நாளு கழிச்சி போய் பாக்கிறாரு, ஒரு ஆளு ரூமுக்கு 3 நாளா வரல்லேன்னா சந்தேகம் வராது…மொதலாளிதானாகட்டும் போட்டோவைப் பாத்தவொடனே மேல விசாரிச்சிருக்க மாட்டாரு….”

ராமாமிர்தம் இடைமறித்தார்: ”எல்லாத்துக்கும் வெளக்கம் ……கேக்காதப்பா…பட்டாம்பூச்சிக்கு கொடுத்துடுவீங்களா…இந்த மானேஜர் இருக்காரே அவர் ஒரு காளி உபாசகராம். அப்பப்ப ட்ரான்ஸாம்….மயக்கம் தெளிந்த பிறகுதான் எங்கே இருக்கோம்னு தெரியுமாம்…மணிக்கணக்கில மயக்கம்னா…ஒவ்வொரு சமயம் காணாமலே போய்விடுவாராம்…மற்றபடி ரொம்ப நல்லவராம்…நம்பகமானவராம்….அதனாலதான் இன்னமும் வெச்சிருக்காரு கிருஷ்ணா வேலையில…எப்ப அவருக்கு விபத்து பத்தி தெரியவந்திச்சோ நமக்கென்ன தெரியும்?…அவர் கையிலதான் முழுப்பொறுப்பும்….செத்துப்போன ஆளும் அப்பப்ப காணாமப் போயிருவாராம்…மானேஜர்க்கும் எறந்தவர்க்கும் காமன் பாயிண்ட்டே சக்தி உபாசகமாம்…”

”ஆஹா…ஆஹா..நல்லாவே இருக்குதே…ஏன் சேது நம்ம புராணங்கள்ல எதுனாச்சும் காளி பட்டாம்பூச்சி சாப்டும்னு சொல்லியிருக்கா?” என்றான் கருணா சீரியசாகவே.

”நம்ம என்னத்தக் கண்டோம். காளி எதையெல்லாம் சாப்டும்னு? ராட்சசங்களைக்கொல்லும்…நீளமா நாக்கை நீட்டி பயமுறுத்தும். …ஆளாளுக்கு சக்தி உபாசகர்னு சொல்லி, பெருசு பெருசா குங்குமப் பொட்டு வெச்சிகிட்டு வெளம்பரங்க கொடுப்பாங்க…அவ்ளோதான் நமக்குத் தெரியும் ….ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு நம்பிக்கை, ம்…என்றான் சேது பதிலுக்கு.

” சபை சற்றே கலையட்டும். சார் கொஞ்சம் அவ்ரு வேலையைப் பார்க்கட்டும். நம்ம ரூமுக்குப் போவோமே.” என்றான் கருணா.

”ஏய்…ஒரு வாக் போயிட்டு வருவமே…கந்தர் ஆசிரமத்துக்கு,..” என்றவாறு எழுந்த நித்தியின் தோள்களை லேசாகப் பிடித்து, கண்கள் சற்றே கலங்க வக்கீல் சொன்னார்: ”நீயும் ஒவ்வொரு தடவ வர்ற்போதும் ஆஸ்ரமத்தைப் பாத்துட்டு வர்ற…அந்த சாமியார் எப்போவோ போய் சேந்திட்டாரு…வெறும் பொதருதான் மண்டிக்கிடக்கு….யாரோ விளக்கேத்தி வெச்சுகிட்டிருக்காங்க…நீ ஒங்கப்பாவைத் தேடிப்போற…அவனுக்குத் தெரியாதுடா…நீ ரொம்ப நல்ல பையன், அப்பா மேல் உசிர வெச்சிருந்தேன்னு…செத்துப்போறச்சே மனசொடஞ்சுல்ல…”…

கண்களில் வழிந்த் நீரைத் துடைத்தவாறு வேகமாக வெளியேறினான் நித்தி. நண்பர்கள் பின் தொடர்ந்தனர்.

அதன்பிறகு நீண்டநேரம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஆஸ்ரமத்திற்கு கேட்டென்று எதுவும் கிடையாது. யாரோ பெயர்த்தெடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

செம்பருத்தி, மகிழம்பூ..பாரிஜாதம்….மகிழம்பூ தரையெல்லாம் கொட்டிக்கிடக்கும். ஊதுவத்தி, சந்தனம் இந்த மணத்தோடு அதுவும் கலந்து…செம்பருத்தி நூற்றுக் கணக்கில்.. பச்சை இலைகளுக்கு நடுவில் பெரிய பெரிய பூக்கள்…..அருகிலேயே ஆரஞ்சுக் காம்புகளுடன் வெள்ளைப்பூக்கள்… இவையெல்லாம் ஆஸ்ரமம் பரபரப்பாக இருந்தபோது காணப்பட்ட காட்சிகள்…ஆனால் நண்பர்கள் பார்ப்பது செம்பருத்தி தவிர  எல்லாம் புதர்தான்…கோரமாக இருக்கும். யாரோ ஒரு பக்தை அவ்வப்போது அங்கிருந்த சிறிய கோயிலுக்கு விளக்கேற்றி வைத்துக்கொண்டிருப்பார்…இவர்கள் போகும்போதெல்லாம் அங்கிருந்த கிணற்றில் நீர் இறைத்து செடிகளுக்கும் மரங்களுக்கும் பாய்ச்சுவார்கள்.

”இந்த சாமியாராலே எங்கப்பாவுக்கு பைசா ப்ரயோஜனம் இல்ல….ஆனாலும் அவ்ருக்கு கூட்டம் கூடுதா…ஏதேதோ நடந்துதா சொல்றாங்களா…இவ்ருக்கும் ஒரு நப்பாசை…எவ்ளவு நாள் வயசான காலத்திலயும் பக்கெட் கணக்கா தண்ணி இழுப்பாரு…நானும் அப்பப்ப வருவேன்…புரட்சில்லாம் பேச ஆரம்பிச்சப்புறம் அதிகம் வரமாட்டேன்…ஆனாலும் சாமியார் மேல் ஏதோ பிரியம்…போலீஸ்காரங்க என்னப் பின்னிட்டாங்கங்க்ற நியூஸ் எங்கப்பா இங்கே இருந்தப்போதான் வந்திச்சாம்..அய்யோன்னு சாஞ்சவர்தான்….”

இந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லுவான் பல்வேறு வடிவங்களில். அப்புறம் வாரியார் பிரசங்கம், மதுரை சோமு கச்சேரி, சாமியார் எப்படியெல்லாம் பெரிய மனிதர்களை காக்காய்பிடிப்பார், இப்படி எத்தனையோ கதைகள். ஆனால் அன்று நித்தி எதுவுமே பேசவில்லை. வழக்கம்போல் நீர்கூட இறைக்காமல், கிணற்றுக் கட்டைமேல் அமர்ந்து அங்கு மண்டிக்கிடந்த புதரையே பார்த்துக்கொண்டிருந்தான். தந்தைக்கு தவறிழைத்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு அவனை அந்தநேரம் அதிகமாகவே பாதித்திருந்ததுபோலிருந்தது.

”எங்கியாவது அப்பாவோட உருவம் தெரியாதான்னுதான் ஏங்குறான்,” என்றான் கருணா மெல்லியகுரலில், சற்று விலகிப்போய்.

சேது அவர்கள் அனைவர்க்கும் தெரிந்ததையே பெருமூச்சுவிட்ட வண்ணம் மீண்டும் சொன்னான்: ”நம்ம நித்திக்கு பயங்கர காம்ப்ளெக்ஸ்டா….அம்மாவோட கூடவேயிருக்கான் ஆனா பேச்சுவார்த்தையே இல்ல…இவனால்தான் அவ்ருபோனாருன்னு அவங்களுக்கு கோபம்…எப்டியாவதுஎங்கியாவது அப்பாவப் பாத்திரமாட்டோமான்னு ஏங்குறான்…பாத்திட்டான்னா அம்மாகிட்ட சொல்லலாம், தன்ன மன்னிச்சிடுவாங்கன்னு நினைக்கிறான்…அவங்க அப்பா அளவு நல்ல உயரமா, ஒடம்புவாகோட, நரச்ச தலை ஜிப்பா, கறுப்பு ஃப்ரேம் கண்ணாடின்னு யாரு தூரத்தில வர்றதுபோலத் தெரிஞ்சா நம்மாள் நின்னுட்றான்யா…..இப்ப எப்டியாயிட்டான்னா, செத்துப்போன எவங்களாயாவது ஒருத்தர திருப்பிப் பாத்திட்டோம்னா, அப்பாவும் வந்திடலாம்லன்னு நம்புறான்போல்… எவ்ளவு நாள் இவன் ஸ்டேபிளா இருப்பாங்கிறதே தெரிய்ல்லடா … அன்னிக்கு அப்டித்தான் எங்கிட்ட சொல்றான், தோ வர்றாரு பார்றா சேது…பில்ட், கலர், நடை எல்லாம் அப்டியே எங்க சித்தப்பாடான்னவன்…நின்னுட்டான். எங்களைத் தாண்டி போற வரைக்கும் இவன் நகரவே இல்ல….’ஏண்டா அந்தாளைத்தான் ஒனக்குப் புடிக்காதும்பியே’..ன்னு கேட்டேன்.

” ‘ப்ச்..அதில்லடா.. இவர் திரும்பி வந்திட்டார்னு வெச்சிக்கவேன் எங்கப்பாவும் வந்திட்லாம்ல…நான் எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லி, மன்னிப்பு கேட்டுகிட்லாம்ல…அதுக்கப்புறம் திரும்பி மறஞ்சுபோவட்டும் கவலையில்ல..நான் ஒரு தடவையாவது ஒரு தடவையாவது’ன்னு  சொல்லிகிட்டு அங்கியே அழ ஆரம்பிச்சிட்டான்…ரொம்ப சங்கடமாப் போயிருச்சு…”

கருணா நொந்துகொண்டான்: ”இப்டி செத்துப்போன ஆட்களைத் தேட்றதே நம்ம பலபேருக்கு வழக்கமாயிருச்சு…அது என்ன ஆதங்கமோ….நாங்கூட நெனப்பேன் ஏதாவது சொவத்தில ஏர்றது போல் ஏறி, வேக வேகமா பழசு பலசை அழிக்கமாட்டோமான்னு..”

அப்படியே நித்தி பக்கம் திரும்பி சேதுவிடம் மெல்லிய குரலிலேயே தொடர்ந்தான்:  ”அங்க பாரு அவனை, அதான் பண்ணிகிட்டிருக்கான்…வேகமா அழிச்சிகிட்டிருக்கான்…அப்பாகிட்ட பேசிகிட்டிருக்கான்…எனக்கேதோ உள்ளுணர்வு சொல்லுதுடா…நம்ம பட்டர் ஃப்ளை ஆளும் எதையோத் தேடிக்கிட்டிருந்திருக்காரு…தனியாளாயிட்டாயிரா…வேற வேலயில்லையா…எதயோ நினச்சு மறுகிக்கிட்டிருந்திருக்காரு….அப்டி விடாம அலஞ்சதலியே பட்டர் ஃப்ளை வளந்திருக்கும்டா……”

இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், “டேய்” என்று இருவருமே ஒரு சேர அலறிக்கொண்டே, கிணற்றருகே ஓடினர். நித்தி சற்று தடுமாறி கிணற்றில் விழவிருந்தவன் தாம்புக்கயிற்றைப் பிடித்து சமாளித்துக்கொண்டிருந்தான். சேதுவும் கருணாவும் அவனை இறுகப்பிடித்து மெல்ல அவனை எழுப்பி நந்தவனத்திலிருந்த ஒரு கல்பெஞ்சிற்கு அழைத்துச் சென்றனர்.

”ஒண்ணுமில்லேடா…ஒரு பட்டர்ஃப்ளை அப்ப்டியே தலைக்குமேல சுத்திகிட்டிருந்த்து கெணத்துக்குள்ள போச்சு…என்னவோ அதைப் பிடிச்சு க்ளோசா பாக்கணும்போல இருந்திச்சி…எட்டுனேன்…கொஞ்சம் தடுமாறிட்டேன்…” நித்தி நிதானமாகவே விளக்கம் கொடுத்தான்.

”பொய் சொல்லாத…உங்கப்பா மொகம் கிணத்துத் தண்ணில் தெரிஞ்சிச்சா?” என்றான் கருணா.

நித்தி பதிலளிக்காமல் தலையைக் குனிந்துகொண்டான்.

”நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று …

பாடல் எங்கிருந்தோ காற்றில் மிதந்துவர, தானும் சேர்ந்து பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமாமிர்தம்.

என்ன சார் அந்த ஆள் வந்திட்டாரா என்று ஆர்வமாக சேது கேட்க, நித்தி மெல்ல எழுந்திருக்க முயன்றான். கருணா அவனைக் கவலையுடன் பார்த்தவண்ணம் நின்றிருந்தான். இன்னமும் நித்தியை அவனது தந்தை ஆட்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவனாக வெளியே வரட்டும் என்று நினைத்தவர்போல, வக்கீல் சேதுவிடம் பேசினார்: குப்புசாமி அதாம்பா லாட்ஜ் மானேஜர், நம்ம வீட்டுக்கே வந்திட்டார்.

”அப்போ போலாமா?”

”அவசரமில்ல. பிரயோசனமுமில்ல…அவர் ஏதும் சொல்லுவார்னு நம்பிக்கையில்ல… .எங்கிட்ட பேசிக்கிட்டேயிருந்தாரு…..பட்டாம்பூச்சி மனுஷனைப் பத்தி எதைக்கேட்டாலும் திரும்பத் திரும்ப காளி, மகமாயிக்கே வந்துகிட்டிருந்தாரு…அந்த நேரம் பாத்து என் பொண்டாட்டி டிவி போடணுமா, அவன் ஏதோ எங்க முத்துமாரி பாட்டை வெக்கணுமா, …ஆ..ஊன்னாரு…உடம்பு வெரப்பாச்சு கண்ணு சொருகிடுச்சு…வேறென்ன மீண்டும் ட்ரான்ஸ்தான்…. சொன்னாரு..என் வைஃப் கிட்ட கவலப்படாத நீ பார்த்துக்க.. தெளிவடஞ்சவொடன காபியோ, பாலோ, என்ன கேக்கிறாரோ கொடுன்னு சொல்லிட்டு நான் ஒங்களைப் பாக்கவந்திட்டேன்…..ஆனா முடிஞ்சவரை நானே விஷயம் திரட்டிட்டேன்..”

சரி சொல்லுங்க சார்…என்றனர் மூவரும் கோரசாக. அக் கல் பெஞ்சில் இடமில்லை. நால்வரும் ஆசிரம்க்கோயிலுக்கு முன்புறம் டைல் பதித்திருந்த தாழ்வாரத்திற்குகுச் சென்று, முடிந்த வரை சுத்தப்படுத்திவிட்டு, அங்கேயே அமர்ந்தனர். ராமாமிர்தம் கவுரவமெல்லாம் பார்ப்பதில்லை.. இளைஞர்களுடன் சரிசமமாக உட்கார்ந்து பேசுவதில் அவருக்கு தனியொரு உற்சாகம்.

நம்ம பட்டர்ஃப்ளை மனுஷன்பேரு விஸ்வநாதனாம்…தஞ்சாவூர்க்காரர்தான்…ரொம்ப வருஷம் டெல்லில் இருந்தவராம். ஏதோ கம்பெனி நடத்திகிட்டிருந்திருக்கிறாரு…பார்ட்னர் ஏமாத்திட்டாரு…குடும்பத்தைப் பத்தி எதுவுமே தெரில…ஏதோ ஒரு கட்டத்தில் நொடிச்சிப்போய் கடசி காலத்தில் சொந்த ஊருக்குப் போயிருவம்னு வந்திட்டாராம்…இந்த லாட்ஜ்ல் ஒரு வருஷமாயிருந்திருக்கிறாரு….மாசாமாசம் செலவுக்கு மணி ஆர்டர் வரும்…எதப்பத்தியும் யார்கிட்டேயும் பேசமாட்டாரு. படிப்பாரு…பாட்டு கேப்பாரு…பாடுவாரு…கோயில் கோயிலா அலைவாரு…இதோ இந்த் பாட்டு கேட்குதே நின்னைச் சரணடைந்தேன்…அது அவரோட ஃபேவரைட்…ஒரே ஒரு தடவை சொன்னாராம் மானேஜர்ட்ட…’ஏன் சாமி 75 வயசாச்சு எனக்கு அறிவேயில்ல…அவ எப்படிங்க வருவா…வேற வேலயில்ல…என்ன மெயிண்டெயின் பண்றதே பெரிய விஷயம்….வரல்ல, பாக்கல, பேசலன்னு பொலம்பினா எப்டி…’

“யாரச்சொன்னாரு, காளியையா இல்ல எம்.ஓ அனுப்றவங்களையா… தெரியல்ல…பணங்கூட ஏதோ ஒரு கம்பெனி பேர்லே வருமாம்….ஆக்சிடண்ட்டுக்கு ரெண்டுநாள் முன்னால லாபி டிவில திருவிளையாடல் நாகேஷ் சீன் போட்ருக்கான்…அவன் வரமாட்டான்…ஏன் வரணும்னு அமர்க்களம் பண்ணுவாரே..அதுதான் .

“ரசிச்சுப் பார்த்துகிட்டிருந்தபோதே விஸ்வநாதன் மானேஜர்ட்ட, ”இல்லய்யா, வருவாய்யா…மஹமாயி வருவாய்யா…மஹாலக்ஷ்மி வருவா…வர்றா…என் தபசெல்லாம் பலிக்கப்போதுய்யா…” என்று உரக்க கத்தினாராம்….”

திடீரென்று உரையாடல் நின்றது. ஏதோ எல்லாவற்றையும் எல்லோருமே எதையோ ஊகித்துவிட்டதைப்போல் மவுனமாயிருந்தனர் சிறிது நேரம்.

இருள் கவியத்தொடங்கியிருந்தது. எவரும் எதுவும் பேசாமல் எழுந்து நடக்கத் தொடங்கினர்.

வீட்டை நெருங்கியபோது, நித்தி என்று கூறியவாறு ராமாமிர்தம் திரும்பினார். ஆனால் அங்கே நித்தியில்லை.

(முற்றும்)