ஆஷிஷ் கேத்தன்

மும்பை

ந்து தீவிரவாதி அமைப்பான சனாதன் சன்ஸ்தா சிபிஐ அதிகாரி ஒருவருக்கும் ஆம் ஆத்மி பிரமுகர் ஒருவருக்கும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பிரமுகர் ஆஷிஷ் கேத்தன்.  இவர் முன்னாள் பத்திரிகையாளரும் ஆவார்.  இவருக்கு இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருமுறையும்,  இந்த வருடம் ஜூலை மாதம் ஒரு முறையும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.   தீவிரவாதிகளால் ஒரு குடிமகனுக்கு மிரட்டல் வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தை ஒட்டியே இந்த மிரட்டல் கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன.

நந்தகுமார் நாயர்

புனே நகரை சேர்ந்த நரேந்திர டபோல்கர் என்னும் பகுத்தறிவு வாதி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ அதிகார் நந்தகுமார் நாயர் விசாரித்து வருகிறார்.  இவர் சிபிஐ பிரிவில் எஸ் பி ரேங்கில் பணி புரிபவர்.   தற்போது இவருக்கும் இதே அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.   இந்த அமைப்பின் பிரமுகரான விரேந்திர டாவ்டே என்பவரை இந்த கொலை வழக்கில் கைது செய்ததால் இவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

இவர்கள் இருவரையும் இந்த அமைப்பு ராட்சதர்கள் என வர்ணித்துள்ளது.  இந்த அமைப்பினர் யாரையாவது ராட்சதன் எனக் குறிப்பிட்டால் அவர் கொல்லப் படவேண்டியவர் என பொருள் என்பதை சிபிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது.   இது தவிர சிபிஐ அதிகாரி எங்கு சென்றாலும் அவர் கண்காணிக்கப் படுவதாகவும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.   சமீபத்தில் அவர் குடும்பத்துடன் ஒரு வேண்டுதலுக்காக குருவாயூர் கோயில் சென்றதை அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த சேத்தன் ராஜ்ஹன்ஸ், “நாங்கள் ஆஷிஷ் கேத்தனுக்கு எந்த ஒரு மிரட்டல் கடிதத்தையும் அனுப்பவில்லை.   அவர் தனது அரசியல் புகழுக்காகவும், தனக்கும் போலீஸ் காவல் தேவை என்பதற்காகவும் தானே ஒரு பொய்க் கடிதம் தயாரித்து நாடகமாடுகிறார்.

அதே போல நாயரை நாங்கள் இந்து விரோதி என கூறியதாக தகவல் வருகிறது.   அதே நேரத்தில் அவரை நாங்கள் குருவாயூர் கோவிலில் கண்காணித்ததாகவும் தகவல் வருகிறது.  இதிலிருந்தே இதுவும் பொய் என்பது எல்லோருக்கும் புரியும்.  மேலும் அவர் பாரபட்சமாக விசாரிப்பார் என்னும் ஐயத்தினால் வேறு அதிகாரியைக் கொண்டு இந்த வழக்கை விசாரிக்க கோரிக்கை விடுத்தோம்.   அதனால் ஆத்திரம் அடைந்த அவர் எங்கள் மேல் வீண் பழி சுமத்துகிறார்” என தெரிவித்தார்

ஒரு மூத்த மகாராஷ்டிரா போலீஸ் அதிகாரி கூறுகையில், “மிரட்டல் காரணமாக உடனடியாக யாருக்கும் போலீஸ் காவல் வழங்கப்படுவதில்லை.  அதற்கு பல நடைமுறைகள் உள்ளன.   போலீசார் பற்றாக்குறை ஏற்கனவே உள்ளதால் தனியார் படையை காவலுக்கு உபயோகப் படுத்தி அந்த செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது.   எனவே யாருக்கும் தேவை இல்லாமல் போலீஸ் காவல் அளிப்பதில்லை” எனக் கூறினார்.