சென்னை ராமாபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளம்பெண், நடிகை சசிரேகா என்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், இந்த கொலை தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். கணவன் போல் வாழ்ந்தவரே, கள்ளக்காதல் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.
,சென்னை ராமாபுரம் அருகே கடந்த ஜனவரி 5ம்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. இதுபற்றி ராயல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்களது விசாரணையில், ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த சசிரேகா கடந்த 2 மாதங்களாக காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது நட்பு மற்றும் தொழில் ரீதியான நபர்களை தனிப்படை விசாரித்தது.
அப்போது சசிரேகா கதாநாயகியாக நடித்திருக்கும் நாளை முதல் குடிக்க மாட்டேன் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரமேஷ் சங்கர் என்பவரும், சசிரேகாவும் கணவன்-மனைவி என்ற தகவல் கிடைத்தது. (இந்தத் திரைப்படம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது!) இருவரும் போரூர் அருகே உள்ள மதனந்தபுரத்தில் வசித்து வந்ததும் அவர்களுடன் லக்கியா என்ற பெண்ணும் தங்கி இருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
தகவல்களை திரட்டிய போலீசார், மதனந்த புரத்தில் உள்ள சசிரேகா ரமேஷ் சங்கர் வசித்த வீட்டுக்கு சென்றனர். ஆனால் ரமேஷ்சங்கர் அந்த வீட்டை காலி செய்து விட்டு லக்கியாவுடன் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு ரமேஷ்சங்கர் மீதான சந்தேகம் வலுத்தது.
சசிரேகாவின் செல்போன் மற்றும் ரமேஷ் சங்கரின் செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீசார் ஆராய்ந்தனர். கடந்த மாதம் 4ம் தேதி அன்று இருவரது செல்போன் சிக்னல்களும், ஒரே பகுதியை காண்பித்தன. . போரூர் மதனந்தபுரம் வீட்டில் இருந்து சசிரேகா பிணமாக கிடந்த ராமாபுரம் வரையில் 2 பேரின் செல்போன்களும் ஒரே நேர் கோட்டில் சென்றிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதை தொடர்ந்தே ரமேஷ் சங்கர் தான் சசிரேகாவை கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.
சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரமேஷ் சங்கரையும், லக்கியாவையும் தனிப்படை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், ரமேஷ்சங்கருக்கும் லக்கியாவுக்கும் நெருக்கமான பழக்கம் இருந்துள்ளது. இதை அறிந்த சசிரேகா கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்சங்கரும், லக்கியாவும் சேர்ந்து சசிரேகாவை கொலை செய்துள்ளனர். பிறகு, கழுத்தை அறுத்து தனியே துண்டித்திருக்கிறார்கள். பிறகு, சசிரேகாவின் ஆடைகளை கிழித்து எரிந்து விருகம்பாக்கம் பகுதியில் கால்வாயில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றிருக்கிறார்கள்.
கொலைசெய்யப்பட்ட சசிரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ரோஷன் என்ற மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்த சசிரேகா சினிமா ஹீரோயின் ஆக வேண்டும் என்று விருப்பப்பட்டா். அந்த சூழ்நிலையில்தான் ரமேஷ் சங்கரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. “நாளை முதல் குடிக்க மாட்டேன் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சசிரேகா கடந்த செப்டம்பர் மாதம், தனது மகன் ரோஷனை கடத்தி வைத்துக்கொண்டு ரூ.6 லட்சம் கேட்டு மிரட்டுவதாக மடிப்பாக்கம் போலீசில் ரமேஷ் சங்கர் மீது புகார் அளித்துள்ளார். அப்போது, போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சசிரேகா புகார் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.