சென்னை:
தவறுதலாக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் அடித்து உதைத்த போதை போலீஸ்காரர்களால் பெரும பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த் சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருள்ராஜ் என்பவர் நேற்று மதியம் வடபழனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் குறுக்கே வந்துள்ளது. இதனால், அருள்ராஜூக்கு முன்னால் சென்றால் வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போட்டனர். அருள்ராஜூம் பிரேக் போட்டார். இந்த சூழ்நிலையில் இவர்களுக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் பிரேக் போட முயன்ற போது தடுமாறி கீழே விழுந்தது.
அந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் ரோடில் விழுந்தனர். பின்னர் போக்குவரத்து சீரானதால் அனைத்து வாகனங்களும் புறப்பட்டுச் சென்றன. இதேபோல் அருள்ராஜூம் புறப்பட்டுச் சென்றார். கீழே விழுந்த மூன்று பேரும் மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அருள்ராஜை விரட்டிக் கொண்டுச் சென்றனர். எம்எம்டிஏ சிக்னல் அருகே அவரை மடக்கிய மூன்று பேரும், முதலில் மோட்டார் சைக்கிளில் இருந்த சாவியை பிடுங்கினர். பின்னர், அருள்ராஜ் ஹெல்மெட்டை கழட்டியவுடன், அவரை ஓங்கி ஒருவர் அறைந்தார். பின்னர் மூன்று பேரும் சூழ்ந்து கொண்டு அருள்ராஜை சராமரியாக தாக்கினர்.
தாக்கியவர்களில் ஒருவர் போலீஸ் காக்கி உடை அணிந்திருந்தார். மதியம் 2.30 மணிக்கு பட்டபகலில் நடுரோடில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அருள்ராஜை அவர்களிடம் இருந்த அப்பகுதி மக்கள் காப்பாற்றினர். வாகன ஓட்டிகள் அனைவரும ஹெல்மெட் அணிந்திருந்ததால், யார் என்று அடையாளம் தெரியாமல் 3 பேரும் அருள்ராஜை தாக்கியது தெரியவந்தது.
3 பேரும் போலீஸ்காரர்கள் எனத் தெரிந்தது. ஒரு மோட்டார் சைக்கிளில் ட்ரிபிள்ஸ் வந்த 3 பேரும் போதையில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், மதுசூதணன், வினோத் ஆகியோர் போலீஸ்கார்கள், மற்றொருவர் அருள் உதயம், இவர் இளைஞர் காவல் படையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 3 பேரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
‘‘பொதுமக்கள் மத்தியில் போலீசார் இப்படி போதையில் அப்பாவி ஒருவரை போட்டு அடித்த சம்பவம் சக போலீசார் மத்தியில் வெட்கக்கேடாக உள்ளது’’ என போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.