டில்லி

ன்று ஒரு வழக்கில் சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.  இதையொட்டி அவர்கள் இருவரும் தங்களை குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பாதுகாக்கக் கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார்கள்.  இந்த வழக்கு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹ்ரிதிகேஷ் ராய் ஆகியாரின் அமர்வு விசாரணை செய்தது.

இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம், “நீதிமன்றங்கள் சமுதாய விதிமுறைக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்யும் இளைஞர்களுக்குப் பெருமளவில் உதவுகின்றன.  இளைஞர்கள் சாதி மறுப்பு திருமணத்தின் மூலம் இந்தியாவில் சாதி வேறுபாடு மற்றும் சமூக பதற்றங்களைப் பெருமளவில் குரைத்து வருகின்றார்கள்.  இதன் மூலம் சமூக பதற்றங்களைத் தணிக்கச் சாதி மறுப்பு திருமணம் வழி வகைகள் செய்கின்றன.

சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சாதியை நிர்மூலமாக்க கூடிய ஒரே தீர்வு ஆகும்.  இவ்வாறு ரத்தங்கள் இணைவதன் மூலமே உறவினர் மற்றும் உறவு உணர்வை உருவாக்க முடியும்.  இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பெரியோரிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் போது உதவிக்கு நீதிமன்றங்கள் உள்ளன.  இரு வயது வந்த நபர்கள் திருமணம் செய்ய குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவை இல்லை“ எனத் தெரிவித்துள்ளது.