தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் வெடிகள் வெடிப்பது சகஜம்தான். அப்படி ஓர் அதிர்வேட்டை வெடித்திருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள், மாநில மகளிர் அணி துணை செயலாளரான டாக்டர் எம்.ஆர். ஜெமிலா.
கட்சியிலிருந்து விலகுவதாக இவர் கடிதம் அனுப்ப.. அதன் பிறகு, “இவரை கட்சியிலிருந்து நீக்குகிறேன்” என்று அதன் தலைவர் சரத்குமார் அறிவித்திருக்கிறார்.
இப்போது இவர், தமிழகம் முழுதும் இரு சக்கர வாகனத்தில் “சமத்துவ பயணம்” புறப்படப்போவதாக அறிவித்திருப்பதுதான் ஹைலைட்!
இந்த நிலையில் ஜெமிலாவை சந்தித்தோம்.
சமத்துவ மக்கள் கட்சியில் இப்போது நீங்கள் இல்லை. பிறகு ஏன் “சமத்துவ பயணம்” என்று அறிவித்திருக்கிறீர்கள்? கட்சியைக் கைப்பற்றும் எண்ணமா?
(சற்றே கோபமாக) அந்த கட்சியில் நான் இல்லை. அந்த கட்சியைப் பற்றி நான் யோசிக்கவும் இல்லை. ஆனால், “சமத்துவம்” என்பது சரத்குமாருக்கு மட்டும் உரிமையன சொல்லா? அதை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாதா?
நம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், பிரிவினை,சமூக அநீதிகள் அகல வேண்டுமானால் மனிதம் வளர வேண்டும். பாகுபாடற்ற சமுத்துவ சமுதாயமே மனிதம் வளர்க்க உதவும். இந்த சீரிய நோக்கத்தை வலியுறுத்தும் விதமாகவே எனது தலைமையில் தமிழகம் முழுதும் உள்ள 234 தொகுதிகளிலும் இரு சக்கர வாகன விழிப்புணர்ச்சி பேரணி துவங்க இருக்கிறேன்.
இந்த சமத்துவ பயணத்தை, “பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை” சார்பாக செய்கிறோம்.
சமகவில் இருந்து வெளியேறியதாக நீங்கள் சொல்கிறீர்கள். வெளியேற்றப்பட்டதாக சரத்குமார் சொல்கிறார். எது உண்மை?
கட்சியில் நடக்கும் பல விசயங்கள் எனக்கு பிடிக்கவில்லை. ஆகவே கடந்த செய்வாக்கிழமையே நான் விலகுவதாக கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதிவிட்டேன். அதை மீடியாவுக்கும் கொடுத்துவிட்டேன். அதன் பிறகுதான் சரத்குமார் என்னை நீக்குவதாக அறிவிக்கிறார். இதிலிருந்தே எது உண்மை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!
கட்சியில் நடக்கும் பல விசயங்கள் பிடிக்கவில்லை என்கிறீர்களே.. அப்படி என்ன நடந்தது?
சிறுவயதில் இருந்தே அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. குறிப்பாக, எல்லா துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள். சாதனை புரிகிறார்கள். ஆனால், அரசியலில் மட்டும் பெண்கள் பளிச்சிட முடியவில்லையே என்கிற எண்ணம் எனக்குள் இருந்துகொண்டே வந்தது.
ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், சட்டமன்றத்தில் பெண்களின் சதவிகிதம் ஏழுதான்!
இந்த நிலை மாற வேண்டும், பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்கு சமத்துவம் கிடைக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலுக்கு வந்தேன்.
சமத்துவ மக்கள் கட்சி என்று பெயரிலேயே சமத்துவம் இருந்ததால் அந்த கட்சியை தேர்ந்தெடுத்தேன்.
ஆனால், அங்கு சேர்ந்ததும்தான், கட்சிப் பெயரில் மட்டும்தான் சமத்துவம் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை என்பதை உணர்ந்தேன். முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர், பெண்களை இழிவாக பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். பெண்களை அவமரியாதை செய்வதே அவர்களது வேலை. இதை தலைமை கண்டுகொள்ளவே இல்லை.
மேலும் கட்சி மாவட்ட செயலாளரை, கட்சிக்காரர்கள் சிலரே நடுரோட்டில் வைத்து அடித்து உதைக்கிறார்கள் அதையும் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை.
இதையெல்லாம் நீங்கள் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கலாமே!
சரத்குமாரிடம் சொன்னால் அவர் கண்டுகொள்வதே இல்லை. அவரைப் பொறுத்தவரை, பணம்தான் முக்கியம். தவிர, தனக்கு ஜால்ரா போடுபவர்களைப் பற்றி என்னதான் புகார் கொடுத்தாலும் கண்டுகொள்ளமாட்டார்.
மாநில மகளிர் அணி செயலாளர் என்கிற முறையில் ராதிகாவிடம் புகார் சொல்லலாம் என்றால், இந்த ஒருவருடத்தில் அவர், கட்சி அலுவலகத்துக்கு வந்து நான் பார்த்தே இல்லை! பிறகு என்ன செய்வது?
சமகவில் நாடார் மற்றும் நாடார் அல்லாதவர்களிடையே மோதல் இருப்பதாகவும், அதுதான் அடிதடி, நீக்கம் வரை போனது என்றும் சொல்லப்படுகிறதே..!
நாடார்களுக்கு என்று அந்த கட்சியில் ஏதும் லாபி கிடையாது. நாடார் அல்லாத சிலர்தான் அப்படி ஒரு தோற்றத்தை, ஏற்படுத்தி வருகிறார்கள். கட்சியின் துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணனும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஒரு கூட்டத்தில் அவரை “தென்பாண்டி சிங்கம்” என்று நான் புகழ்ந்ததற்கு சரத்குமான் என்னை கண்டித்தார். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
ஒருவருடம், அந்த கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் உணர்ந்தது என்ன?
ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுவதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார் சரத்குமார். சமீபத்திய வெள்ளத்தினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் அரசின் செயல்பாடு எப்படி இருந்தது என்று பல்வேறு கட்சிகளும் விமர்சனம் செய்தன. ஆனால் அது குறித்து சரத்குமார், வாய் திறக்கவே இல்லை.
சுருக்கமாக சொல்லப்போனால், கிளப் மாதிரித்தான் கட்சி நடக்கிறது. ஏதாவது அறிக்கை அனுப்பினால் போதும் என்று நினைக்கிறார். மக்களை அணுகி, அவர்களது பிரச்சினையை உணர்ந்து போராடுவது அவருக்கு பிடித்தமானதாக இல்லை. . அதுமாதிரி இயக்கத்தில் நீடிக்க எனக்கு விருப்பம் இல்லை.
உங்கள் அடுத்கட்ட திட்டம் என்ன?
பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்பு வருகிறது. சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த வாரம், தமிழகம் முழுதும் சமத்துவ பயணம் புறப்படுகிறோம். அதன் பிறகு முடிவெடுப்பேன். நிச்சயமாக இன்னும் இருபது ஆண்டுகள் அரசியலில் இருப்பேன். மக்களுக்கு தொண்டாற்றுவேன். அதன் பிறகு ஓய்வு பெறுவேன். இதுதான் என் திட்டம்.