aa
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும், அப்புறப்படுத்திய குடிசை வீடுகளுக்கு அதன் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து,  மக்கள் நலக்கூட்டணி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
.சிறு–குறு தொழில் செய்தவர்களுக்கு மறு கட்டமைப்பு செய்ய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், ம.தி.மு.க. துணை செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்டு மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் முன்பு, பத்திரிகையாளர்களிடம்  திருமாவளவன் கூறியதாவது:–
“சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீராக உள்ளது. அமைதி பூங்காவாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் வடமாவட்டங்களில் ஜாதி வன்முறைகள், வெறியாட்டம் தொடர்ந்து  கொண்டுதான் இருக்கிறது.  இந்த நிலையில் சட்டம் ஒழுங்கி சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
மின்சார தடை இல்லை, மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்றும் முதல்வர் கூறுகிறார். இப்போதும் பல இடங்களில் மின்சாரவெட்டு இருக்கத்தான் செய்கிறது.  110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் பல திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் இப்போது முதல்வர் சிறப்பு அறிவிப்புகளாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இதெல்லாமே ஏமாற்று வேலையாகும்”  – இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ரெட்சன் அம்பிகாபதி, மணிமாறன், ஜீவன், விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் செல்லத்துரை, இரா.செல்வம், வி.கோ.ஆதவன், ரவிசங்கர், அம்பேத்வளவன், அன்புசெழியன், இந்திய கம்யூனிஸ்டு ஏழுமலை, மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாக்கியம், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.