Coke-or-Pepsi1
தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நெல்லை தொழிற்போட்டையில் உள்ள கோ-கோ- கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்று நீரை, ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வீதம், நாள் ஒன்றுக்கு 9 இலட்சம் லிட்டரை, உறிஞ்சி வருகிறது. தற்போது கோ- கோ- கோலா நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் என்ற அளவில் தாமிரபரணி தண்ணீரை உறிஞ்ச திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளும்போது, முறையாக முன் அறிவிப்பு செய்து, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதிமுறைகள் எதனையும் இந்நிறுவனம் இதுவரை பின்பற்றவில்லை.
கோ -கோ- கோலா நிறுவனம், உயர்த்தப்பட்ட சீவலப்பேரி தடுப்பணை மூலம் விவசாயிகளுக்கு நீராதாரம் கூடும் என்றும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும், உறை கிணறுகளின் நீர்நிலை சீராகும் என்றும் பித்தலாட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
விரிவாக்கப் பணிகளுக்குத் தேவைப்படும் 20 இலட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பான நிலை ஏற்படும் என்பதை உணர்ந்தே இதுபோன்ற பித்தலாட்டப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வேளாண்மைக்கு ஆதாரமாகவும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்ற தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி, பல்லாயிரக்கணக்கான கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி போன்ற நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும்’’என்று வலியுறுத்தியுள்ளார்.