டில்லி
கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவகாரத்தினால் அமளி ஏற்பட்டு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க காவல்துறை ஆணையர் ராஜிவ்குமாரிடம் விசாரணை செய்ய நேற்று சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா சென்றனர். ஆனால் அவர்கள் மேற்கு வங்க காவல்துறையினரால் ஆணையர் இல்ல வாயிலில் தடுக்கப்பட்டு காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் அங்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் சிபிஐ சார்பில் இது குறித்து உடனடி விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் இது குறித்து கடும் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சியினர் ஆளும் பாஜகவை எதிர்த்து கடுமையான அமளியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சீட்டு மோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை மம்தா தடுப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் கொல்கத்தாவில் நடந்தது போன்ற ஒரு நிகழ்வு உலகில் எங்குமே நடவாதது எனவும் வரலாறு காணாதது எனவும் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். அதை ஒட்டி கூச்சலும் குழப்பமும் ஏற்படவே பாராளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமளியின் காரணமாக மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.