malaysia_2585136f

 

கோலாலம்பூர்:  

மலேசிய நாட்டில் இருக்கும் அலோர் செடார் என்ற நகரில் “ஸ்மார்ட் கய்ஸ்” என்ற முடிதிருத்தகத்தில் வேலை செய்ய தமிழகத்தைச் சேர்ந்த  27 பேர் சென்றார்கள்.

பணி ஒப்பந்தத்தில், முடிதிருத்தும் பணி மட்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதே நிறுவனத்துக்குச் சொந்தமான பூக்கடை, இளநீர் கடைகளுக்கும் பணிக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதோடு தினமும் 14 மணி நேரம் வேலை செய்யும் படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது உறவினருக்கு அனுப் பிய ‘வாட்ஸ் அப்’ குரல் பதிவு மூலம் கூறியுள்ளதாவது:

“தினமும் 14 மணி நேரம் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். இரண்டு வருடம் “வேலை பர்மிட்” என்று சொன்னார்கள். ஆனால் 3 , 4 வருடம் இருக்க கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் இந் திய மதிப்பில் ரூ.80,000 தர வேண்டும் என்கிறார்கள்.  மறுத்தால் கடுமையாக அடித்து உதைக்கிறார்கள்.  கடையில் திருடிவிட்டதாக போலீஸில் பிடித்துக்கொடுப்போம் என்றும் மிரட்டுகிறார்கள். கொத்தடிமைகளாக துன்புறுகிறோம்.  எப்படியாவது எங்களை உயிருடன் சொந்த நாட்டுக்கு திரும்பிச்செல்ல உதவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு இவர்களில் 20 பேர் தப்பிச் சென்று, அங்குள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார்கள்.  ஆனால், தூதரக அதிகாரிகளோ “நாங்கள் விசாரிக்கிறோம். அதுவரை, நீங்கள் வேறு எங்காவது தங்கிகொள்ளுங்கள்” என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.

பிறகு அந்த கடை கடை உரிமையாளரிடம்  இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, “2 வருடங்கள் வேலை செய்தவர்களுக்கு மட்டுமே விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பது எங்கள் வழக்கம். மற்றவர்கள் அவர்களாகவே டிக்கெட் எடுத்துச் செல்ல வேண்டும்.  அதுவும் 15 நாள் கழித்துதான் உறுதியாக சொல்ல முடியும்” என்று அந்த ஓனர் தெரிவித்திருக்கிறார்.

“பிழைப்புக்காக வெளிநாடு வந்து கொத்தடிமைகளாக நடத்தப்படுபவர்களுக்கு உதவாமல், மலேசிய முதலாளிக்கு சாதகமாக இந்திய தூதரக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்” என்று குமுறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருக்கிறது. இந்த அமைப்பின்  பொதுச் செயலாளர் பட்டுக் கோட்டை ஏ.பிரபாகரன், “பாதிக்கப்பட்டவர்கள் பற்றி எங்களின் ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் குழு மூலம்  தெரியவந்தது. உடனே,  மலேசியாவில் உள்ள எங்களது உறுப்பினர்களின் அறைகளில் அவர்களை தங்க வைத்தோம்.  இந்திய தூதரகத்திடம் பேசி, அவர்களை அழைத்து வருவதற்கும் முயற்சி எடுத்து வருகிறோம்” என்றார்.

இந்த விவகாரம் மூலம் தெரியவருவது, இந்திய தூதரக அதிகாரிகளின் அலட்சியம். இந்தியர்கள் தவிக்கிறார்களே என்கிற அக்கறை கொஞ்சமும் அவர்களுக்கு இல்லை.

இன்னொன்றையும் இந்த விவகாரம் உணர்த்துகிறது.

27 தமிழர்களை அடித்து உதைத்து மிரட்டி, தினம் 14 மணி நேரம் அவர்களின் உழைப்பை உறிஞ்சிய ஸ்மார்ட் கய்ஸ்” என்ற கடையின் அதிபர் குமார் என்ற தமிழரே!

சுயநல வெறி அதிகமாகிவிட்டால் இனமாவது, தேசமாவது!