திருவனந்தபுரம் மே 16 இல் நடைபெற உள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் புதிய கட்சியான பாரத் தர்ம ஜனசேனாவும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கேரளாவில் செல்வாக்குப் பெறாத பாஜக எப்படியும் இந்த முறை பல தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் தேர்தலில் களம் இறங்கி இருக்கிறது.
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் ( SNDP ) சமீபத்தில் பாரத் தர்ம ஜனசேனா கட்சியாக உருவெடுத்துள்ளது.ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் , கேரளாவில் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களான ஈழவர் இன மக்களிடம் செல்வாக்கு பெற்ற அமைப்பாகும்.
பி.டி.ஜே.எஸ்.எனும் பாரத் தர்ம ஜனசேனா கட்சியை பாஜக தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டுள்ளது. அக்கட்சிக்கு 37 தொகுதிகளை பாஜக ஒதுக்கி தந்துள்ளது. இதுதொடர்பான கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.இதில் மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் மற்றும் பாரத் தர்ம ஜனசேனா கட்சி மாநிலத் தலைவர் குசார் வெள்ளப்பள்ளியும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறிவதாவது
தேசிய ஜனனாயக கூட்டணியின் மாநில செய்ல்குழு கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அதற்கு முன்னர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் பாஜக, பாரத் தர்ம ஜனசேனா தவிர முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி.தாமசை தலைவராகக் கொண்ட கேரள காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளன என்றார்.
கேரள மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியவில்லை. ஆனால் கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மட்டும் பாஜக சுமாரான இடங்களைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.