ஊடக குரல்:
லரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி.   அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது.
ஊடகத்துறை மேல் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்,   இந்தத் துறையில் என்ன சாதிக்க விரும்புகிறார்கள், இன்றைய ஊடக நிலை போன்ற பல கேள்விகளுக்கு பதில் பெறுவதே நமது நோக்கம்.
ஏற்கெனவே புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் (சீனியர் எடிட்டர்)  வேங்கடபிரகாஷ், கலைஞர் தொலைக்காட்சியில் சிறப்புச் செய்தியாளராக பணிபுரியும் சுகிதா ஆகியோரைத் தொடர்ந்து, மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவர்களது பேட்டி வெளியாகிறது.    
 
a
 
ஊடகத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
எழுத்தின் மீது சிறு வயதிலிருந்து ஆர்வம்  இருந்தது. சிறுவயதின் என் மிக முக்கியமான நினைவு பாடப்புத்தகங்களை தவிர மற்றவற்றை வாசித்து அதன் பொருட்டு வீட்டில் திட்டு வாங்குவதுதான். 11,12வது படிக்கும் போது அந்த வயதுக்குரிய சமூக ஆர்வமும் சேர்ந்து கொண்டது. சமூகம் பற்றிய புரிதல் இல்லாத ஆர்வமாக அது இருந்தது என்பதை இப்போது உணர்கிறேன்.
ஆனால் அந்த காலக்கட்டத்தில்தான் ஒன்று ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் அல்லது ஊடகத்துறையில் நுழைய வேண்டும் என்று முடிவெடுத்தேன். இரண்டில் எதை செய்தாலும் சமூகத்திற்கு பணி செய்யலாம் என்பதுதான் அப்போதைய நினைப்பாக இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது ஐ.ஏ.எஸ் படிக்க கடினமாக உழைக்க வேண்டும் என்று உணர்ந்து ஊடகத்துறையில் நுழைவது என்று முடிவு செய்தேன். கல்லூரி இறுதி ஆண்டு முடிக்கும் முன்பு வேலையும் கிடைத்துவிட்டது.
இதுவரையிலான உங்கள் ஊடக பயணம்..
பி.ஏ.ஆங்கில இலக்கியம் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த போதுதான் வீட்டில் ஊடகத்துறையில் பணி புரிய வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவித்தேன். கடுமையான எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அம்மா, மீடியா என்பதை சினிமா போன்ற துறைகளோடு தொடர்பு படுத்தி கூடவே கூடாது என்றார். அழுதார். என் பிடிவாதத்தை பார்த்து அப்பாதான் எனக்கு ஒரு கஸின் பிரதர் இருக்கான். ஜர்னலிஸ்டாதான் இருக்கான் . அவன்கிட்ட கூட்டிகிட்டு போறேன் என்றார். அப்படிதான் டி.என்.கோபாலன் அறிமுகம். ஒன்றரை வருடங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டே மாலையில் அவரது அலுவலகத்திற்கு சென்றேன். பல பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு போகவும் ஊடகத்துறையில் இப்போதும் இருக்கும் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களை பார்க்கவும் முடிந்தது.
1998ல் நியூஸ் டுடேவில் ஆட்கள் தேவை என்கிற விளம்பரத்தைப் பார்த்து அப்ளை செய்தேன் . தேர்வு வைத்து என்னை சேர்த்துக்கொண்டார்கள். அப்போது கல்லூரி படிப்பை முடித்திருக்கவில்லை. இரண்டாண்டுகள் கழித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் சேர்ந்தேன். அங்கு ஒரு சின்ன பிரச்னை காரணமாக ஆறு மாதத்தில் வேலையை விட்டுவிட்டேன். இனி ஊடகத்துறையே வேண்டாம் என்கிற முட்டாள்தனமான முடிவையும் எடுத்திருந்தேன். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் உயர்பொறுப்பில் இருந்த விஜயராகவன், சென்னை ஆன்லைன் என்கிற இணையத்தளத்தில் இருந்தார். அவர் என்னை அழைத்து அறிவுரை சொல்லி சென்னை ஆன்லைனில் பணிபுரிய வைத்தார். அங்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே இந்தியா டுடே தமிழில் ரிப்போர்ட்டராக சேரும் வாய்ப்பு கிடைத்தது. நான்கு வருடங்களுக்கு பிறகு தி வீக்கில் சேர்ந்தேன். ஏழு வருடங்கள் அங்கு இருந்த பிறகு டெக்கான் கிராணிக்கலில் ஆறு மாதம் பணி புரிந்துவிட்டு ஒரு சின்ன பிரேக் எடுக்கலாம் என்று தோன்றியது.
2013ல் தி இந்து தமிழ் ஆரம்பிக்கும் போது அழைப்பு வந்தது. அப்போதே இந்தியா டுடேவின் தமிழ் பதிப்புக்கு ஆசிரியராக பொறுப்பேற்கவும் அழைப்பு வந்தது. 2013ல் இந்துவில் சேர்ந்த பிறகு, ஒரு வருடம் பணி புரிந்துவிட்டு 2014 நவம்பரில் இந்தியா டுடேவில் சேர்ந்தேன். ஆனால் தமிழ் சூழல் பற்றிய நுண்ணுர்வு இல்லாத தில்லி நிர்வாகம் தமிழ் உள்ளிட்ட எல்லா பிராந்திய மொழி பதிப்புகளையும் நிறுத்த முடிவு எடுத்தது. அதன் பின்னர் இந்தியா டுடே ஆங்கிலத்தில் பணி புரிந்தேன். அதிலிருந்து கடந்த ஆகஸ்டில் விலகி அப்போதிலிருந்து சுதந்திரமான ஊடகவியலாளராக இருக்கிறேன். இது பிடித்திருக்கிறது.
ஒரூ ஊடகக்காரரின் அடிப்படை தகுதி என எதை நினைக்கிறீர்கள்?
வாசிப்பும் சமூக உணர்வும் எப்போதும் யாருடனும் பேச தயாராயிருக்கும் மனநிலையும் ஒரு நல்ல ஊடகவியலாளரின் தகுதி என்று நினைக்கிறேன். நாம் யாருடன் உரையாடுகிறோமோ அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாயிருந்தால் அவர்களிடம் பேசுவதில் கூடுதல் நுண்ணுணர்வு தேவை என்பதை ஒரு ஊடகவியலாளர் எப்போதும் மறக்க கூடாது என்று நினைக்கிறேன்.
b
ஒருவர்ஆபத்தில் இருக்கும் நேரத்தில் காப்பாற்றாமல் படம் எடுக்கிறார்கள் என்று  ஊடகத்தினர் மீது குற்றச்சாட்டு உண்டு.  உங்கள் பார்வை என்ன?
சுனாமி வந்த போது தி வீக்கில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். சென்னையிலிருந்து கார் ஒன்றை எடுத்துக்கொண்டு நாகப்பட்டினம் பயணித்தோம். நாகப்பட்டினத்தை சேர்ந்தவுடன் கார் கதவை திறந்து கவனிக்காமல் காலை கீழே வைத்திருந்தால் ஒரு குழந்தையின் பிணத்தின் மீதுதான் வைத்திருப்பேன். குவியல் குவியலாக பிணங்கள் அப்புறப்படுத்தப்படுவதை கைகால்கள் சிதறியிருப்பதை ஒரு பெண்ணின் தலைமுடி பின்னலோடு தனியாய் இருப்பதை பார்த்தேன். அங்கிருந்த 3 நாட்களும் எதாவது சாப்பிட்டேனா என்று நினைவில்லை. சாப்பிடாமல் திரிந்து வேலைப்பார்த்தோம். அதை கட்டுரைகளாக எழுதித் தள்ளினோம்.
அந்த இடத்தில் என்னால் எதாவது உதவி செய்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஆயிரமாயிரம் பிணங்களை ஒரே இடத்தில் பார்த்தும், ஒரு மரத்துப் போன மனநிலையுடன் என்னால் வேலை பார்க்க முடிந்தது. இன்றுவரை என்னை குற்றவுணர்வுக்கு உள்ளாக்கும் ஒரு சம்பவம் அது.
1993ல் கெவின் கார்டர் எடுத்த புகைப்படம் ஒன்று புலிட்சர் விருது பெற்றது. சூடானில் பட்டினியால் உடல் மெலிந்த குழந்தை ஒன்று உணவு முகாமுக்கு செல்ல முயற்சி செய்வதையும் அந்த குழந்தை இறப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் கழுகு ஒன்றையும் அவரது கேமரா படம் பிடித்தது. படம் பிடித்த கையோடு கழுகை விரட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் காரணமாக குழந்தையை தொடவில்லை. அந்த புகைப்படம் வெளியாகவில்லை என்றால் சூடானின் கோரமான நிலை உலகிற்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
ஆனால் அடுத்த வருடம் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை கடிதத்தில் தனிப்பட்ட காரணங்கள் தவிர பட்டினி கிடந்த காயம்பட்ட குழந்தைகளின் முகங்களை தன்னால் மறக்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் பிரஸ்ஸல்ஸ் குண்டு வெடிப்பில் விமானப் பணிப்பெண் ஒருவர் ஆடைகள் கிழிந்த நிலையில் உள்ளாடையுடன் அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. குண்டுவெடிப்பின் முழுமையான பாதிப்பை உள்ளடக்கிய தருணம் என்று அந்த புகைப்படத்தை ஒரு சாராரும் அந்த பெண்ணை இப்படி காட்சிப்பொருளாக்கியிருக்க கூடாது என்று இன்னொரு சாராரும் வாதாடி வருகிறார்கள்.
இந்த குழப்பம் எல்லா ஊடகவியலாளர்களுக்கும் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். மருத்துவமனையில் இருக்கும் அந்த பெண் உடல்நலன் தேறி வந்து என்னை ஏன் அப்படி படம் எடுத்தீர்கள் என்று கேட்டால் ஊடகவியலாளர்களிடம் என்ன பதில் இருக்கும்?
ஊடக போட்டி, பரபரப்பு என்கிற போட்டி மனப்பான்மையை தாண்டி ஒரு ஊடகவியலாளர் இது போன்ற ஒரு நேரத்தில் தனது மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஊடகத்துறையை இன்னொரு வேலையாக பார்க்காமல் சமூக பணியாக பார்க்கும் ஒருவரால் அப்படிதான் நடந்து கொள்ள முடியும்.
(அடுத்த பகுதி நாளை…)