சென்னை:
தீபாவளி விழாவை கடந்த வருடம் 29 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 12 சிறப்பு ரயில்களே இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது, பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
வெளியூர்களில் இருந்து.. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து தங்களது வேலை நிமித்தமாக சென்னையில் வசிப்பவர்கள் லட்சக்கணக்கானவர்கள் உண்டு. இவர்களில் பெரும்பாலோர் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாட விரும்புவார்கள்.
ஆகவே இந்த விழாக்களின் போது, தென் மாவட்ட ரயில் முன்பதிவுகள் அனைத்தும் நிரம்பிவிடும். இதனால், வருடாவரும் திருவிழா நேரங்களில் தென்னக ரயில்வே, சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
கடந்த வருடம் தீபாவளி நேரத்தில் 29 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கியது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூபாய் 1 கோடியே 93 லட்சத்து 67 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
ஆனால், இந்த வருவாய் எதிர்பார்த்ததைவிடக் குறைவு என்று கூறும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் இன்த முறை 12 சிறப்பு ரயில்களை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
பயணிகளோ, “மக்களின் தேவைய புரிந்துகொண்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். ஆனால் ரயில்வே நிர்வாகமோ, பண்டிகைக்கு வெகு நாள்களுக்கு முன்போ அல்லது வெகுநாள் பின்போ சிறப்பு ரயில்களை இயக்குகின்றன. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பண்டிகை காலத்தில் வேறு வாகனங்களில் தங்கள் ஊருக்கு சென்றுவருகிறார்கள்.
ரயில் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பே செய்துவிடலாம் என்பதால் அனைத்து முக்கிய ரயில்களிலும் காத்திருப்பு பட்டியல் 300 ஐ தாண்டி நிற்கிறது. இதை உணர்ந்து அடுத்தடுத்து பயணிகளின் வசதிக்கேற்ப சிறப்பு ரயில்களை இயக்கினால், மக்களுக்கும் வசதி. ரயில்வே நிர்வாகத்துக்கும் வருமானம் கிடைக்கும்” என்கிறார்கள்.
ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?