கும்பகோணம் மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் பெருந்திரளாக கூடி வருகிறார்கள். அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதுவரை 20 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடியிருக்கிறார்கள். .
தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக 2800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 7 தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து துறை சார்பாக 1500க்கு மேற்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன.
நாளை 22ம் தேதி நடைபெறும் தீர்த்தவாரிதான் மகாமக விழாவின் முக்கிய நிகழ்வாகும். ஆகவே நாளை நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குடந்தையில் கூடுவார்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு மேலும் அதிகப்பட்டிருக்கிறது.